அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!
தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் இணைந்து நடித்த ஒரே ஒரு படம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் திரையுலகிற்கும் இல்லாத பிணைப்பு தமிழ்நாட்டிற்கு உள்ளது. தமிழ்நாட்டு அரசியலையும், தமிழ் திரையுலகையும் பிரிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
5 முதலமைச்சர்கள் நடித்த படம்:
திராவிட கட்சிகள் தோன்றியது முதலே தற்போது வரை தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டை ஆட்சி செய்த முன்னாள் மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திரையுலகில் இருந்து வந்தவர்கள். தி.மு.க.வின் தலைவர்களான அண்ணாதுரை, கருணாநிதி இருவரின் கை வண்ணத்தில் ஏராளமான திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.
கருணாநிதி - எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா கூட்டணியில் ஏராளமான படங்கள் உருவாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை ஆட்சி செய்த 5 முதலமைச்சர்கள் ஒரே படத்தில் நடித்தது உங்களுக்கு தெரியுமா? 1970ம் ஆண்டு வெளியான எங்கள் தங்கம் படத்தில்தான் 5 முதலமைச்சர்கள் இணைந்து நடித்தனர்.
எங்கள் தங்கம்:
இந்த படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாதுரை, கருணாநிதி, நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆரின் எவர்கிரீன் ப்ளாக்பஸ்டர் ஹிட் படத்தில் இந்த படமும் ஒன்றாகும். மேகலா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு முரசொலி மாறன் கதை எழுத கிருஷ்ணன் பஞ்சு இந்த படத்தை இயக்கியிருப்பார்.
இந்த படத்தின் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆருக்கு லாட்டரியில் 10 ஆயிரம் பரிசு விழ, அந்த பரிசுத்தொகையை அண்ணாதுரை வழங்குவது போலவும், அதை எம்.ஜி.ஆர். பெறுவது போலவும் காட்சி இருக்கும். அப்போது, அண்ணாதுரை அருகே நெடுஞ்செழியனும், கருணாநிதியும் உடன் இருப்பார்கள்.
சம்பளம் வாங்காமல் நடித்த எம்.ஜி.ஆர்
அதேபோல, படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருப்பார். படத்தின் தொடக்க காட்சியில் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆராகவே ஒரு காட்சியில் தோன்றுவார். அப்போது, எம்.ஜி.ஆருடன் முரசொலி மாறன் அந்த காட்சியில் தோன்றுவார்.
இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
அண்ணாதுரை மறைவிற்கு பிறகும், எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகும் நெடுஞ்செழியன் தமிழ்நாட்டின் இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆர். சம்பளம் ஏதுமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய முரசொலி மாறன் இந்த படத்தில் கிடைத்த வெற்றியால்தான் தனது குடும்பம் கடனில் இருந்து மீண்டதாக முரசொலி மாறன் பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இடம்பெற்ற தங்கப்பதக்கத்தின் மேலே, நான் செத்து பிழைச்சவன்டா, நான் அளவோடு ரசிப்பவன் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடல்கள் ஆகும். எங்கள் தங்கம் படத்திற்கு இருக்கும் இந்த சிறப்பு தமிழில் மட்டுமின்றி இந்தியாவில் வெளியான வேறு எந்த மொழி படத்திற்கும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.




















