TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Tamil Nadu Lok Sabha Election 2024: காரில் ரசிகர்கள் புடைசூழ புறப்பட்ட விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
மக்களவை தேர்தலில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 -ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பலரும் ஆர்வமுடன் முன்கூட்டியே வந்து வாக்களித்தனர். இதற்கிடையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த தேர்தலில் அவர் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் யாருக்கு தனது வாக்கினை செலுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
#Vijay #TVK
— Thamaraikani (@kani_twitz24) April 19, 2024
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நீலாங்கரையில் உள்ள பள்ளியில் வாக்களித்தார் @actorvijay pic.twitter.com/o7axfsYery
கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்த நடிகர் விஜய் இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். முன்னதாக நடந்த 2 தேர்தல்களில் அவர் கார் மற்றும் சைக்கிளில் வந்து வாக்களித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
இம்முறை எப்படி வாக்களிக்க வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. அதன்படி இந்த முறை பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் ரசிகர்கள் புடைசூழ புறப்பட்ட விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அவர் வாக்குசாவடியை சென்றடைந்தபோது காலை முதல் விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் சுற்றி வளைத்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்திய காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு அவரை வாக்கு மையத்துக்குள் அழைத்து சென்றனர். மேலும் வாக்களிக்கப் போகும் போது மிஷினில் இருந்த அனைத்து சின்னங்களையும் ஒருமுறை நன்கு பார்த்து தனக்கு விருப்பப்பட்ட வேட்பாளருக்கு வாக்கை செலுத்தினார்.
விஜய் வாக்கு செலுத்திய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி முன்னணி பிரபலங்கள் வரை வாக்களிக்க வந்தபோது எந்தவித இடையூறு இல்லாமல் வாக்களித்தனர். ஆனால் விஜய்க்கு கூடிய கூட்டம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.