முன்னணி நடிகர்களுக்கு முழு சம்பளம் தர முடியாது..தயாரிப்பாளர் சங்கம் அதிரடி தீர்மானம்
ரஜினி , கமல் , விஜய் , அஜித் உள்ளிட்ட முன்னணி கோலிவுட் நடிகர்கள் முழு சம்பளத்தை பெறாமல் ஷேர் அடிப்படை முறையில் சம்பளத்தை முடிவு செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது

தமிழ் திரைப்பட துறையின் முன்னணி நடிகர்களாக ரஜினி , கமல் , விஜய் , அஜித் , சிம்பு , தனுஷ் , விக்ரம் உள்ளிட்ட பலர் திகழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு படத்திற்கு இவர்களுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் அண்மையில் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் பெரியளவில் வசூல் ஈட்டவில்லை. இதனால் நடிகர்களின் சம்பளத்தில் சில மாற்றங்களை செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இனிமேல் நடிகர்கள் படத்தின் ரிலீஸூக்கு முன்பே முழு சம்பளத்தை பெறுவதற்கு பதிலாக படத்தின் வியாபாரத்தில் ஒரு பங்கை தங்கள் சம்பளமாக பெற வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தொடர் தோல்விகளை கொடுத்த ஸ்டார்கள்..திணறும் தயாரிப்பாளர்கள்
வசூல் ரீதியாக இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சுமாரான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியான படங்கள் அடுத்தடுத்து வசூல் ரீதியாக தோல்வியை தழுவியதே இதற்கு முக்கிய காரணம். ரஜினியின் கூலி , கமலின் தக் லைஃப் , விக்ரமின் வீர தீர சூரன் , சூர்யா நடித்த ரெட்ரோ , அஜித்தின் குட் பேட் அக்லி , விடாமுயற்சி என அத்தனை படங்களும் சராசரியான வெற்றிப்படங்களாக மட்டுமே அமைந்தன. ஆனால் இந்த படங்களின் நடிகர்களுக்கு 100 முதல் 200 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் படங்களின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கே பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர்களின் சம்பளம்
மற்ற மொழியில் குறைவான பட்ஜெட்டில் நல்ல தரத்துடன் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்று வருகின்றன. மலையாளத்தில் லோகா , கன்னடத்தில் காந்தா ஆகிய படங்கள் அடக்கமான பட்ஜெட்டில் உருவாகி பான் இந்திய அளவில் வெற்றிபெற்றன. நடிகர்களின் சம்பளத்தை குறைத்து படத்தின் உருவாக்கத்திற்கு பணத்தை செலவு செய்வது குறித்து பல திரைத்துறையினர் பேசி வருகிறார்கள். தமிழில் சிவகார்த்திகேயன் போன்ற சில நடிகர்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு சம்பளத்தை மொத்தமாக பெறாமல் வருமான பங்கீட்டு முறையில் சம்பளம் வாங்குகிறார்கள். இதே முறையை அனைத்து நடிகர்களும் பின்பற்ற தற்போது தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
வருமான பங்கீட்டு முறையில் சம்பளம்
தேணாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு நேற்று சென்னையில் கூடியது. இந்த நிகழ்வில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நடிகர்களின் சம்பளம் குறித்த முக்கிய தீர்மானம் ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. "தமிழ் சினமா தற்போது OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் Revenue Share படம் நடிக்க வேண்டும் தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. ஆகையால் இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் Revenue Share- ல் மட்டுமே தயாரிப்பது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், OTT மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இயக்குனர்கள் திரையரங்க வியாபாரத்திற்கு ஏற்றால் போல் தங்களது திரைப்படங்களை உருவாக்க தயாரிப்பாளருக்கு பட்ஜெட் தயார் செய்து தர வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது." என தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பை ரஜினி , கமல் , விஜய் , அஜித் மற்றும் பிற கோலிவுட் முன்னணி நடிகர்கள் ஆதரிப்பார்கள் என்று தமிழ் சினிமாவின் இந்த முன்னெடுப்பு சில திரைப்பட உருவாக்கத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கலாம்.





















