TR Sundaram Birthday: தமிழில் முதல் கலர் திரைப்படம்..! மலையாளத்தில் முதல் பேசும் படம்..! தமிழில் முதல் ஹாலிவுட் கலைஞர்கள்...! - யார் இந்த டி.ஆர்.சுந்தரம்?
தமிழ் சினிமா மட்டுமின்றி, மலையாளம், சிங்களம் என்று பல்வேறு மொழிகளுக்கான திரை உலகத்திற்கான நீண்ட பயணத்தை தொடங்கி வைத்த ஒரு மாபெரும் திரைப்பிதாமகனைப் பற்றிதான் இந்த கட்டுரையில் காணப்போகிறோம்.
புராண கால கதைகள், படம் முழுவதும் பாடல்கள் என்று பாமரர்களுக்கு புரியாத ஒன்றாக இருந்த சினிமாவின் முகத்தை மாற்றி எளியவனுக்கும் சினிமாவை கொண்டு சேர்த்த பெருமை இருவருக்கு சேரும். ஒருவர் ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார். மற்றொருவர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம்.
சேலத்தில் மிகப்பெரும் ஜவுளி வியாபாரியாக திகழ்ந்து வந்த வி.வி.சி. ராமலிங்கம் என்பவருக்கு ஐந்தாவது மகனாக 1907ம் ஆண்டு பிறந்தவர் டி.ஆர். சுந்தரம். சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. பட்டங்களைப் பெற்ற அவர் பின்னர் இங்கிலாந்து சென்று ஜவுளித்தொழிலில் உயர்கல்வி பயின்றார். அதே நாட்டில் கிளாடிஸ் என்ற பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார்.
ஆங்கில கலாச்சாரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட டி.ஆர்.சுந்தரம், அப்போதைய ஹாலிவுட் படங்களாலும் ஈர்க்கப்பட்டார். பின்னர், இந்தியா திரும்பிய அவர் சேலத்தில் தனது தந்தை தொழிலை கவனிக்காமல் திரைப்படத் தொழில் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார். இதனால், அப்போது சேலத்தில் பிரபலமாக இருந்த ஏஞ்சல் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தினருடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அந்த காலத்தில் படப்பிடிப்பிற்காக மும்பை மற்றும் கொல்கத்தாவிற்கு செல்ல வேண்டியது இருந்தது. இதனால், தமிழ்நாட்டிலே படப்பிடிப்பு நடத்துவதற்கான வசதியை உருவாக்கினால் என்ன என்ற சிந்தனை டி.ஆர்.சுந்தரத்தின் மனதிற்குள் தோன்றியது.
தமிழ்த்திரையுலகின் புதிய முகத்திற்கான முதற்புள்ளியாக சேலம், ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பிரம்மாண்ட திரைப்பட நிறுவனத்தை நிறுவினார். ஒரு முழுப்படத்தையும் தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் தனது திரைப்பட நிறுவனத்தின் உள்ளேயே அமைத்தார். படப்பிடிப்பு தளம், பாடல் ஒலிப்பதிவு செய்வதற்கான தளம், திரைப்படத்தை ரிவியூ பார்க்க அரங்கம், நடிகைகள், நடிகர்களுக்கான தனி அறைகள் என்று அனைத்து வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பாக 1936ல் சதி அகல்யா என்ற படத்தை தயாரித்தார். பின்னர், புரந்தரதாஸ் என்ற கன்னடப்படத்தையும் தயாரித்தார். இந்திய திரையுலகிலே தனித்துவமாக விளங்கும் மலையாள திரையுலகில் முதல் பேசும் படத்தை தயாரித்தவர் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமே. 1938ம் ஆண்டு எஸ்.நோட்டானி என்ற இயக்குநர் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த பாலன் என்ற திரைப்படமே மலையாள திரையுலகின் முதல் பேசும் திரைப்படம் ஆகும். தமிழில் முதன் முதலில் வெளியான சண்டைத் திரைப்படமான மாயா மாயவன் என்ற திரைப்படத்தையும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமே தயாரித்தது. 1938ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அப்போதைய பிரபல நடிகர் டி.கே.சம்பங்கி என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இன்றைக்கு தமிழ் திரைப்படங்களில் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிய ஹாலிவுட் திரைப்பட கலைஞர்கள் அழைத்து வருவது பெரிய செயலாக கருதப்பட்டு வரும் சூழலில், டி.ஆர்.சுந்தரம் அன்றே தனது படங்களுக்கு ஹாலிவுட் கலைஞர்களை பயன்படுத்தினார். ஜெர்மனியில் இருந்து வாக்கர், பேய்ஸ் என்ற இரு ஒளிப்பதிவாளர்களை தனது படத்திற்கு ஒளிப்பதிவாளராக பயன்படுத்தினார். தமிழ் திரையுலகின் முதன்முதலில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களை பயன்படுத்தியவரும் டி.ஆர்.சுந்தரமே.
ஜெர்மனி ஒளிப்பதிவாளர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யூ ஆர் சுப்பாராவ் மற்றும் ஜே.ஜி. விஜயம் பிற்காலத்தில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களாக திகழ்ந்தனர். அதுமட்டுமின்றி தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமின்றி ஹாலிவுட் இயக்குனரையே தமிழ் திரைப்படத்தை இயக்க வைத்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்திற்கு உண்டு.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்த மந்திரிகுமாரி என்ற படத்தை எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் 1950ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர் சுந்தரம் தயாரித்தார். தமிழே தெரியாத அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இந்த திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு எல்லிஸ் ஆர்.டங்கன் அமெரிக்காவிற்கே திரும்பிவிட்டார்.
விறுவிறுப்பான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட டி.ஆர்.சுந்தரம் நம்பியாரை நாயகனாக வைத்து 1950-லேயே திகம்பர சாமியார் என்ற துப்பறியும் திரைப்படத்தை உருவாக்கினார்.
தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, தமிழில் முதல் கலர் திரைப்படத்தை டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார். எம்.ஜி.ஆர். நாயகனாக நடிக்க தமிழில் முதல் கலர் திரைப்படமாக வெளியானதுதான் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” திரைப்படம். கொள்ளையர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு நல்லவன் என்ற மையக்கருத்தை கொண்டு உருவான இந்த படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரமே இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் எம்.ஜி.ஆரின் புகழை மக்கள் மத்தியில் மேலும் உயரச்செய்தது. இந்த படத்தின் வசனமான “அண்டாக கசும், அபூக்காககுகும் திறந்திடு சீசேம்” இன்றளவும் மிகவும் பிரபலம்.
இதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேட திரைப்படத்தையும் உருவாக்கியவர் டி.ஆர்.சுந்தரம்தான். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் அப்போதைய சூப்பர் ஸ்டாரான பி.யூ.சின்னப்பா நடிப்பில் 1940ல் வெளியான உத்தமபுத்திரன் திரைப்படமே தமிழில் வெளியான முதல் இரட்டை வேட திரைப்படம் ஆகும். இன்றளவும் மூன்று வேடங்கள், நான்கு வேடங்கள் ஆச்சரியமாக பேசப்படும் சூழலில், அன்றைக்கு இரட்டை வேடத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகவும் அதிசயமாகவே மக்களால் பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தை டி.ஆர். சுந்தரமே இயக்கியிருந்தார். இந்த படம் ஆங்கில திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது.
தமிழில் எவ்வாறு முதல் கலர் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியிட்டதோ, அதே போல மலையாளத்தின் முதல் கலர்படமாக அலிபாபா நாற்பது திரைப்படத்தின் மறு உருவாக்கமாக கண்டம் பெச்ச கொட்டு என்ற பெயரில் உருவாக்கினார். இந்த படத்தையும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி.ஆர்.சுந்தரமே இயக்கியிருந்தார்.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை ராணியாக வலம் வந்த மனோராமாவை முதன்முதலில் தமிழில் கதாநாயகியாக 1963ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவரும் டி.ஆர். சுந்தரம்தான். தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் என்று நடிகர் ஜெய்சங்கர் புகழப்படுவதற்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமே காரணம். ஜெய்சங்கரை நாயகனாக வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் சி.ஐ.டி. சங்கர், வல்லவன் ஒருவன், நான்கு கில்லாடிகள், காதலித்தால் போதுமா? போன்ற துப்பறியும் படங்களை டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார். இந்த படங்கள் அனைத்தும் வசூலில் மாபெரும் வெற்றியை குவித்தது.
தமிழ் திரையுலகில் முதன்முதலில் தொழில்நுட்ப ரீதியாகவும், பொருட் செலவு ரீதியாகவும் பிரம்மாண்டங்களை புகுத்திய டி.ஆர்.சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கீழ் தமிழகத்தின் மறைந்த முதல்-அமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஊதியம் பெற்று பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி போன்ற கவிஞர்களும் தங்களது தொடக்க காலத்தை இங்கேதான் தொடங்கினர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகத்திறமைகளுக்கும், பல புகழ்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து தமிழ் திரையுலகின் பல மாற்றங்களுக்கு தொடக்கப்புள்ளியான மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரத்தின் 114வது பிறந்தநாள் இன்று.