(Source: ECI/ABP News/ABP Majha)
Bava Lakshmanan: நடிகர் பாவா லட்சுமணனின் கால் விரல் அகற்றம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?
பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் தோன்றி ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் பாவா லட்சுமணன். குறிப்பாக சூப்பர்குட் பிலிம்ஸில் மேனேஜராக இருந்த இவர் சரத்குமார் நடித்த மாயி படத்தில் ‘வாம்மா மின்னல்’ என்ற டயலாக் பேசி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். காமெடி, குணச்சித்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தனது திறமையை நிரூபிக்கும் அவர், சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை.
இதனிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பாவா லட்சுமணன், ‘தனக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டதாகவும், பழைய உற்சாகம் தன்னிடம் இல்லை’ எனவும் தெரிவித்திருந்தார்.மேலும் ‘இப்போது எல்லாமே ஓடிடி மயமாகி விட்டதால் தன்னைப் போன்றவர்களுக்கு வேலையே கிடைப்பதில்லை. யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து கிடைப்பது தான் வருமானமாக உள்ளது. கொரோனா சமயத்தில் நான் செத்து போய்விட்டதாக போஸ்டர் ஒட்டினார்கள்’ என மன வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
நான் இறந்ததாக தகவல் வெளியான போது சந்தானம் உள்ளிட்ட பலரும் போன் செய்து கேட்டார்கள். அனால் நடிகர் வடிவேலு மட்டும் போன் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் பாவா லட்சுமணன் கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் காரணமாக இது மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வறுமையில் வாடும் நடிகர் பாவா லட்சுமணனுக்கு திரையுலகினர் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.