Coolie Box Office Collection: ரஜினி பவர் ஹவுஸ்.. மீண்டும் எகிறிய கூலி வசூல்.. நேத்து மட்டும் இத்தனை கோடியா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் எவ்வளவு வசூல் என்பதை காணலாம்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய கூலி திரைப்படம் சுதந்திர தின கொண்டாட்டமாக கடந்த 14ம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நாயகன் ரஜினிகாந்துடன் இணைந்து அமீர்கான் சிறப்புத் தோற்றத்திலும் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
எகிறும் கூலி வசூல்:
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவு தந்தனர். இந்த நிலையில், தொடர் விடுமுறைக்கு பிறகு வார நாட்களில் ஓரளவு ரசிகர்கள் கூட்டம் வந்த நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சனிக்கிழமை நேற்று விடுமுறை நாள் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. படம் வெளியாகி இந்திய அளவில் முதல் 7 நாளில் ரூபாய் 229.65 கோடி வசூல் செய்திருந்தது. குறிப்பாக, தமிழில் மட்டும் ரூபாய் 150 கோடி வசூல் செய்த நிலையில், தெலுங்கில் ரூபாய் 52 கோடி வசூலை கூலி எட்டியது. இந்தியிலும் ரூபாய் 26.05 கோடியையும், கன்னடத்தில் ரூபாய் 2.05 கோடியையும் எட்டியது.
10 நாளில் எவ்வளவு?
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் ரூபாய் 5.85 கோடி ரூபாய் வசூல் கிட்டிய நிலையில், படம் வெளியாகி 10வது நாளான நேற்று சனிக்கிழமையில் மீண்டும் கூலி படத்தின் வசூல் அதிகரித்தது. அதாவது, நேற்று மட்டும் ரூபாய் 10 கோடி வரை படம் வசூலித்தது. கூலி திரைப்படம் மொத்தமாக கடந்த 10 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 245.50 கோடியை எட்டியுள்ளது.
காட்சிகள் நிரம்பும் அரங்குகள்:
நேற்று காலை காட்சி மந்தமாக இருந்த நிலையில், மதியம், மாலை மற்றும் இரவுக்காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. காலையில் 19.05 சதவீதமும், மதியம் 33.94 சதவீதமும், மாலைக் காட்சியில் 41 சதவீதமும், இரவுக்காட்சியில் 47.76 சதவீதமும் இருக்கைகள் நிரம்பி காணப்பட்டது.
சென்னையில் 50.25 சதவீதம் இருக்கைகள் நிரம்பிய காட்சிகளாக நேற்று ஓடியது. கோவையில் 37 சதவீதமும், மதுரையில் 26.25 சதவீதமும், பாண்டிச்சேரியில் 33 சதவீதமும், சேலத்தில் 27.50 சதவீதமாகவும், வேலூரில் 35 சதவீதமாகவும், திண்டுக்கல்லில் 43.25 சதவீதமும், திருச்சியில் அதிகபட்சமாக 52.25 சதவீதமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக கூலி படம் ஓடியது. பெங்களூரிலும் 27.75 சதவீதம் இருக்கைகள் நிரம்பிய காட்சிகளாக படம் ஓடியது.
தெலுங்கில் வரவேற்பு:
இந்தியில் வெளியான கூலி படம் நேற்று பெங்களூரிலும், சென்னையிலும் 50 சதவீதத்திற்கும் மேலே அரங்குகள் நிரம்பிய காட்சிகளாக ஓடியது. கூலி சென்னையில் நேற்று தெலுங்கில் வெளியிடப்பட்ட திரையரங்கில் இருக்கைகள் 67.67 சதவீதம் நிரம்பியிருந்தது. படத்திற்கு தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சுமார் 300 முதல் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ஏற்கனவே ரூபாய் 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது.
கூலி படத்தில் அதிகளவு வன்முறை காட்சிகள் இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதால் குடும்பத்துடன் பலரும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேசமயம், வேறு பெரிய நடிகர்களின் படம் வராத காரணத்தால் கூலி படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும் கூலி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவு வருவார்கள் என்று கருதப்படுகிறது.





















