Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Governor Ravi explains: சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாமல் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதாகவும், தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்யப்பட்டதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

உரையை வாசிக்க மறுத்த ஆளுநர் ரவி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (20.01.2026) ஆளுநர் உரை நடைபெற இருந்த நிலையில், அரசு தயாரித்த உரையை வாசிக்க ஆளுநர் மறுத்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சட்டமன்றத்தில் நடைபெற்றது என்ன.? தமிழக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள்
1) ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை;
2) தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில் ஆதாரமற்ற கோரல்களும், பல தவறான தகவல்களும் இடம்பெற்றிருந்தன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
3) மாநிலம் ரூபாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு குறைவான ஈர்ப்பு மிக்க மாநிலமாக மாறி வருவதை காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை, மாநிலங்களில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு நான்காவது பெரிய மாநிலமாக இருந்தது. இன்று அது ஆறாவது இடத்தில் நீடிக்கவே போராடுகிறது.
4) போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்துக்கு மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள் சதவீதத்துக்கு மேலாகவும் அபாயகரமாக அதிகரித்துள்ள பெண்களின் பாதுகாப்புப் பிரச்சினை முற்றிலும் 33 போதிலும், புறக்கணிக்கப்பட்டுள்ளது
5) போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோக வழக்குகளின் கூர்மையான அதிகரிப்பு, ஒரு மிகத் தீவிரமான கவலையாகும். போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2000 (இரண்டாயிரம்) பேர், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், தற்கொலை செய்துள்ளனர். இது நமது எதிர்காலத்தை மிகத் தீவிரமாகப் பாதிக்கிறது. இவை வெகு சாதாரணமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன
6) தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன
தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம்
7) நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 (இருபதாயிரம்) பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் அதாவது கிட்டத்தட்ட தினமும் 65 தற்கொலைகள். நாட்டின் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு அபாயகரமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. இருந்தும், இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை. இவை புறக்கணிக்கப்பட்டுள்ளன
8) கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவும், கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதகமாகப் பாதிக்கின்றன. 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், கௌரவ விரிவுரையாளர்கள் மாநிலம் முழுவதும் அமைதியின்மையுடன் உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். இவை அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை; மேலும், இந்தப் பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது
9) பல ஆண்டுகளாகத் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம ஊராட்சிகள் செயலிழந்து கிடக்கின்றன. அவை நேரடியாக அரசின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவை, அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் எதிரானவை. கிராம ஊராட்சிகள் மீட்டெடுக்கப்படுவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இது ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவே இல்லை.
கோயில்களில் அறங்காவலர்கள் இல்லை
10) மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான பக்தர்கள் கோயில்களின் தவறான நிர்வாகத்தால் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். பழங்கால கோயில்களை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் 5 ஆண்டுகள் கடந்தும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் ஈவு இரக்கமின்றிப் புறக்கணிக்கப்படுகின்றன.
11) தொழிலை நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுக செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும். இருப்பினும், நாட்டில் 5.5 கோடிக்கு அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், மகத்தான வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் சுமார் 40 இலட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை மற்றமாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகுகின்றனர். இந்த விவகாரம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம் அவமதிப்பு
12) ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் அமைதியற்றவர்களாகவும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை;
13) தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.





















