Madharaasi: போட்ட காசை திருப்பித் தருமா மதராஸி? நாளுக்கு நாள் டல்லடிக்கும் வசூல் - 4 நாளில் இவ்ளோதானா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
மதராஸி கலெக்ஷன் எவ்வளவு?
ஆனாலும், படத்திற்கான வசூல் அதில் பிரதிபலிக்கவில்லை. படக்குழு படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகெங்கும் 50 கோடியை மதராஸி வசூலித்ததாக அறிவித்துள்ளது. ஆனால், படம் இந்தியாவில் மட்டும் இதுவரை கடந்த 4 நாட்களில் ரூபாய் 41 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
முதல் நாள் ரூபாய் 13.65 கோடியை வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் ரூபாய் 12.1 கோடியை வசூலித்தது. 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை ரூபாய் 10.65 கோடி வசூலித்தது. 4வது நாளான நேற்று ரூபாய் 4.15 கோடி வசூலை குவித்தது. சனிக்கிழமையை காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சனிக்கிழமையை காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை குறைவாகவே இருந்தது. கடந்த 4 நாட்களில் ரூபாய் 40.55 கோடியை வசூலாக எட்டியுள்ளது.
குறைக்கப்பட்ட காட்சிகள்:
தமிழில் மட்டும் இதுவரை சுமார் 32 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. மதராஸி தமிழில் மட்டும் நேற்று 25.91 சதவீதம் திரையரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியது. வாரத்தின் முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது.
சென்னையில் நேற்று காட்சிகளும் மதராஸி படத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 587 காட்சிகள் ஒரே நாளில் ஓட்டப்பட்ட நிலையில், நேற்று 446 காட்சிகள் மட்டுமே ஓட்டப்பட்டது. இந்த படத்திற்கு பதிலாக காஞ்சூரிங், காந்தி கண்ணாடி, அனுஷ்காவின் காட்டி போன்ற படங்கள் திரையிடப்படுவதாக தெரிய வந்துள்ளது. மதுரை, கோவையிலும் காட்சிகள் பெரும்பாலும் குறைக்கப்பட்டுள்ளது.
போட்ட காசை திருப்பித் தருமா?
மதராஸி படம் ரூபாய் 180 கோடி பட்ஜெட்டில் உருவாகியது என்று கூறப்படுகிறது. ஆனால், படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் சிலரது பாராட்டுக்களையும் படம் பெற்று வருகிறது. ஆனாலும், மதராஸி படம் முதலீட்டைப் பெற்றுத் தருமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.
ஏனென்றால், படம் வெளியாகி முதல் 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் வெறும் 40 கோடியை மட்டுமே கடந்துள்ளது. உலகளவில் இது 60 கோடியை கடந்திருந்தாலும் இனி வரும் நாட்களில் பெரியளவில் வசூல் வேட்டையை நடத்துவது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை இவையனைத்தும் சேர்த்தால் படம் முதலீட்டை கடக்குமா? என்பது படக்குழுவிற்கே தெரியும்.
இதனால், மதராஸி வசூல் ரீதியாக போட்ட காசை திருப்பி தருமா? என்பது கேள்விக்குறியாகும். மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக என்ஐஏ தற்கொலை செய்யும் மன நிலையில் உள்ள இளைஞன் ஒருவனை பயன்படுத்தி துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்குவதே படத்தின் கதை. அனிருத் இசையமைத்துள்ளார்.
அமரனை மிஞ்சியதா?
சிவகார்த்திகேயனின் இதற்கு முந்தைய படமான அமரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருந்தது. படத்தின் தலைப்பை போல சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் என்றைக்கும் அமரனாக அந்த படம் அமைந்தது.
அந்த படத்திற்கு பிறகு இந்த படம் வெளியானதால் இந்த படமும் அதேபோல மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மதராஸி அமரன் அளவிற்கு வசூல் வேட்டை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















