Maaveeran Release: குறுக்கே வரும் ஜெயிலர்? .. முன்கூட்டியே ரிலீசாகும் மாவீரன்..அதிருப்தியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரின்ஸ் படத்தின் தோல்வியால், நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த தனது படங்களை மிக கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் அவர் ஒரு படம் நடித்து வருகிறார். “மாவீரன்” என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் நடிகை சரிதா, நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. ஆடை , மண்டேலா ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் தான் மாவீரன் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாவீரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனால் சுதந்திர தின விடுமுறைகளை குறிவைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.
குறுக்கே வரும் ஜெயிலர்
இதனிடையே சன்ன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தும், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் “ஜெயிலர்” படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் நடிகைகள் தமன்னா, ம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது.
முன்கூட்டியே வரும் மாவீரன்
திரையுலகைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால், பிற படங்கள் தங்கள் படங்களை முன்கூட்டியோ அல்லது மற்றொரு தேதியில் வெளியிடுவதோ வழக்கம். அப்படியான நிலையில் ஒருவேளை ஜெயிலர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டால், மாவீரன் சொன்ன தேதிக்கு முன்னதாக, அதாவது ஜூலை மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஒருபுறம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், முன்கூட்டியே வெளியான அறிவிப்பு மாற்றப்படும் என தகவல் வெளியானதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: Rajinikanth: 'அரசியலுக்கு வரமுடியல.. அப்புறம் ஏன் அரசியல் பேசணும்?' - ரஜினியை கடுமையாக விமர்சித்த ரோஜா