Sivakarthikeyan Birthday: ஆங்கர் டூ ஆக்டர்.. கால்ஷீட்டுக்கு காத்துகிடக்கும் தமிழ்சினிமா.. கோலிவுட் பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் கதை..!
ஸ்ரிக்ட்டான போலீஸ் அப்பா.. அதை விட ஸ்ரிக்ட்டான அக்கா.. ரெகுலர் பேமிலிக்கான அம்மா.. என திருச்சி மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சிவகார்த்திகேயன்.
“உன்னால முடியாதுன்னு யாராவது சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல.. உன்ன..” இன்று சினிமா எனும் கனவு தொழிற்சாலைக்குள் நுழைய விரும்பும், கடைக்கோடி கிராமத்து இளைஞனுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாய் இருக்கும் சிவகார்த்திகேயன் உதிர்த்த வார்த்தைகள் இவை.. இந்த வார்த்தைகள் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு மட்டுமல்ல... அவருக்கும் அச்சுபிசகாமல் பொருந்தும். அன்று, முதல் படத்தில் 10,000 சம்பளத்தில் சினிமாவிற்குள் நுழைந்த சிவகார்த்திகேயன், இன்று 25 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறார்.
ஸ்ரிக்ட்டான போலீஸ் அப்பா.. அதை விட ஸ்ரிக்ட்டான அக்கா.. ரெகுலர் பேமிலிக்கான அம்மா.. என திருச்சி மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சிவகார்த்திகேயன்.. சிறுவயதில் இருந்தே படிப்பை விட பையனுக்கு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸில் ஆர்வம் அதிகம். ப்ரண்ட்ஸ், மிமிக்ரி, சேட்டை என சென்று கொண்டிருந்த சிவாவின் வாழ்கையை திருப்பி போட்டது அப்பா தாஸின் இறப்பு.
நிற்கதியாய் நின்றுகொண்டிருந்த குடும்பத்திற்கு கை தந்து உதவியவர் அவரின் மாமானார். ஒரு வழியாக அக்கா கெளரி படித்து டாக்டர் ஆகி குடும்ப பொறுப்பை கையில் எடுக்க, குடும்பம் வறுமையில் இருந்து மெல்ல விலக ஆரம்பித்தது. அதனால்தான் அக்கா மீது இன்றும் சிவகார்த்திகேயனுக்கு பெரும் மரியாதை இருக்கிறது..
வழக்கமான இன்ஜினியர் மாணவருக்கான அரியர்களோடு வலம் வந்த சிவகார்த்தியேனுக்குள் பல திறமைகள் இருந்த போதும், அதை நண்பர்களுக்குள்ளேயும், காலேஜுக்குள்ளேயுமே செய்து வந்தார்.
தொலைக்காட்சியில் வர ஆசைதான்.. ஆனால் தயக்கம்.. திறமைகளை முடக்கியே வைத்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை, நண்பர் ஒருவர் இழுத்து வந்து விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 3யில் விட, தொடங்கியது சிவகார்த்திகேயனின் மீடியா வாழ்கை.. தனது காமெடிகளால் மக்களை கவர்ந்த சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் மாறினார். நல்ல வேலைக்காரனை விஜய்டிவி என்றுமே விட்டதில்லை..
கலக்கல் சேம்பியன்ஸ், ஜோடி நம்பர் ஒன் சீசன் 3 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைக் கொடுத்து அழகுபார்த்தது மட்டுமல்லாமல் அது இது எது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறக்கியது. இந்த நிகழ்ச்சியில் அவர் அடித்த கவுண்ட்ர்கள் சிவாவை பட்டித்தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கிய சிவகார்த்திகேயனுக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் ஏராளம். போட்டியாளர்களுடன் அவர் அடித்த லூட்டிகள் இன்றும் யூடியூப்பில் லட்சகணக்கில் வியூசை அள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.
தொகுப்பாளராக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்த சிவகார்த்திகேயனுக்கு விஜய் டிவின் உச்ச வாய்ப்பான விஜய் அவார்ட்ஸை தொகுத்து வழங்கும் வாய்ப்பையும் கொடுத்து விஜய் டிவி.. இதனிடையே அவருக்கு கல்யாணமும் முடிந்தது.
டிவியில் சாதித்தாயிற்று.. இனி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் முடிவெடுத்த சிவகார்த்திகேயன் சினிமாவின் கதவுகளை தட்ட ஆரம்பித்தார். முதல் வாய்ப்பை 10,000 சம்பளத்தில் அவருக்கு கொடுத்தவர் இயக்குநர் பாண்டி ராஜ்.. படம் பெரிதாக போகவில்லை.. அடுத்ததாக தனுஷின் 3 படத்தில் காமெடியனாக களமிறங்கினார் சிவா.. முதல் பாதியில் மட்டுமே சிவகார்த்திகேயனை பார்க்க முடிந்தாலும், அவருக்கான காமெடி ட்ரேடுமார்க்கை வைத்து விட்டுதான் சென்றார்.. தொடர்ந்து ‘மனம் கொத்தி பறவை’ ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், சிவகார்த்திகேயன் எனும் நடிகன் ஆடியன்ஸிடம் சரியாக சென்றடையவில்லை.
சிவகார்த்திகேயனின் திறமையை 3 படத்திலேயே கணித்த தனுஷ் தனது தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக களமிறக்கினார். அனிருத்தின் இசையும், துரையின் இயக்கமும், தனுஷின் பாடல்வரிகளும் சிவகார்த்திகேயனை கனகச்சிதமாக ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்தோடு, படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
வாய்ப்பு எனும் தேவதையை நன்கு அறிந்த சிவகார்த்திகேயன், அந்த வெற்றியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அடுத்தாக பொன்ராமுடன் இணைந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ எகிடுதகிடு ஹிட்டடிக்க, தயாரிப்பாளர்களின் கவனம் சிவகார்த்திகேயனின் பக்கம் திரும்பியது. அடுத்ததாக வந்த மான் கராத்தே படுதோல்வி அடைய, அடுத்ததாக வந்த காக்கி சட்டையில் அதை மீட்டெடுத்தார்.
சரி காமெடிதான் நமது ட்ராக் என்றாலும், அதில் வித்தியாசம் காட்டினால்தான் இனி பிழைக்க முடியும் என கணித்த சிவகார்த்திகேயன் ரெமோவில் பெண் டாக்டர் வேடத்தை தைரியமாக ஏற்று நடித்தார்.. கொஞ்சம் பிசிறினாலும் சிரித்து விடுவார்கள்.. ஆனால் அதை நூலிழையில் கச்சிதமாய் சிவகார்த்திகேயன் செய்ய,மீதி வேலையை பிசி ஸ்ரீராமும், அனிருத்தும் பார்த்துக்கொண்டனர்.
படம் சூப்பர் ஹிட்டடிக்க.. பட ரிலீஸ் பிரச்னையில் தான் சந்தித்த வலிகளை சக்சஸ் மீட்டீல் அழுகையாக கொட்டித்தீர்த்தார் சிவகார்த்திகேயன்.. அவரது அழுகை எப்படி அனுதாபத்தை பெற்றதோ, அதே போல விமர்சனத்தையும், ட்ரோல்களையும் பெற்றது. அதன் பின்னர் வந்த ரஜினிமுருகன் மாஸ் கிட்டடிக்க.. டாப் நடிகர்களின் பட்டியலில் இணைந்தார் சிவகார்த்திகேயன்.
அதனைத்தொடர்ந்து வந்த மோகன்ராஜாவுடன் கைகோர்த்த வேலைக்காரனும் கை கொடுக்க, அடுத்த வந்த சீமாராஜாவும், மிஸ்டர் லோக்கலும் அட்டர் ப்ளாப் லிஸ்டில் இணைந்தது. இதனிடையே தயாரிப்பாளராக களமிறங்கிய சிவா, நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தை தயாரித்தார்.படம் ஹிட்டடித்தாலும் ஒரு நடிகராக சக்ஸஸ் கிராப்பை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடியான கட்டத்தில், பாண்டிராஜூடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கைகோர்த்தார் சிவகார்த்திகேயன் .
“ நம்மள மாதிரி பசங்க ஒரு வாட்டி ஜெயிச்சா ஒத்துக்க மாட்டாங்க.. ஒவ்வொரு வாட்டியும் ஜெயிக்கணும்.. ஜெயிப்போம்” என சொல்லி அடித்த சிவா பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த நடிகராக மாறினார். படமும் பயங்கர ஹிட்டடிக்க, கோலிவுட் கதாநாயகர்களின் டாப் லிஸ்டில் சிவகார்த்திகேயனின் பேரும் ஏறியது.
இதனிடையே நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை தயாரித்தும் முடித்தார். அதன் பிறகு வந்த ‘ஹீரோ’ பிளாப் ஆக, நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் இணைந்தார். தனக்கான பேஸ்மெண்ட் காமெடி என்றாலும், அதை அப்படியே திருப்பிபோட்டு படத்தில் ஒரு இடத்தில் கூட சிரிக்காமல் நடித்து ஆச்சரியம் காட்டினார்.
அடுத்ததாக, டான், அயலான், தெலுங்கு, தமிழில் பைலிங்குவல் திரைப்படம், கமல் தயாரிப்பில் ஒரு படம், அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை படம், மண்டேலாஇயக்குநருடன் ஒரு படம் என படங்கள் வந்து பார் என்று வரிசைக்கட்டி நிற்கின்றன. இடையில் பாடகராவும், லிரிக் ரைட்டரும் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் குழந்தைகளிடமும் இன்னும் அதிகமாக சென்று சேர்ந்தார்.
கோலமாவு கோகிலாவில் எனக்கு கல்யாண வயசுதான் வந்திருச்சுடி என்றவர் இன்று ‘அரபிக்குத்தில் அராத்து காட்டியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். தான் என்றைக்குமே ஒரு எண்டர்டெயினர் என்பதை என்றுமே மறக்காதது. அதாவது தான் எதை செய்ய வேண்டும் என்பதை விட எதை செய்யக் கூடாது என்பதில் சிவகார்த்திகேயனுக்கு தெளிவாக தெரியும். அந்தத் தெளிவுதான் இன்று அவரை தமிழ்நாட்டை தாண்டி இந்திய மார்க்கெட்டை குறிபார்க்க வைத்திருக்கிறது.. அம்பை சரியாக எரிய வாழ்த்துகள் சிவா..