50 years of Gauravam: சிவாஜி கணேசனை மெருகேற்றிய பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டர்... 50 ஆண்டுகளை நிறைவு செய்த 'கௌரவம்' ..!
50 years of Gauravam : கௌரவம் போன்ற பொக்கிஷமான படங்கள் இனி உருவாக சாத்தியமே இல்லை. பார்த்து ரசிக்க மட்டுமே முடியும். இப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ஒவ்வொரு படமுமே அவருக்கு மைல்கல்லாகவே அமைந்தன. எந்த படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாற கூடியவர்.
அப்படி ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் இதுவரையில் யாருமே அவரை மிஞ்ச முடியாத அளவுக்கு கம்பீரமான நடை, உடை, பாவனை, மிடுக்கான ஆங்கில உச்சரிப்பு, பைப் பிடிக்கும் ஸ்டைல், உடல்மொழி, கர்ஜிக்கும் குரல் வளம் ஒரு நடிகனின் ஒட்டுமொத்த கலைத்துவத்தையும் அப்படியே கொட்டித்தீர்த்து "பாரிஸ்டர் ரஜினிகாந்த்" என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்த நடிகர் சிவாஜியின் நடிப்பில் வெளியான 'கெளரவம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படம் நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான 165வது படமாகும்.
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தந்தை பார்த்தசாரதியின் மேடை நாடகமான 'கண்ணன் வந்தான்' என்ற நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் தழுவல் தான் கௌரவம் திரைப்படமாக உருவானது. அந்த நாடகத்தை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட சிவாஜி கணேசன் "பாரிஸ்டர் ரஜினிகாந்த்" என்ற கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பப்பட்டதால் அதன் முயற்சிகள் தொடங்கப்பட்டது. இப்படத்தில் கடமைமிக்க நேர்மையான வக்கீலாகவும், அவரின் வளர்ப்பு மகன் கண்ணனாகவும் இரட்டை கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் சிவாஜி கணேசன்.
இருவேறு கதாபாத்திரங்கள் என்றாலும் இரண்டுக்கும் வித்தியாசமான உடல்மொழியை காட்டி அசத்தி இருப்பார். மிகவும் மரியாதைக்குரிய நீதிபதி பதவி ஒரு சாதாரண வக்கீலுக்கு கிடைத்ததால் கொந்தளித்து எழுந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த், ஒரு தூக்கு தண்டனை கைதியை தனது அபாரமான வாதத்திறமையால் நிரபராதி என நிரூபித்து விடுதலை பெற்று தருகிறார். மீண்டும் அந்த நிரபராதியாக விடுவிக்கப்பட்ட கைதி கொலை வழக்கில் சிக்க அவருக்கு எதிரான அரசு தரப்பின் வக்கீலாக வளர்ப்பு மகன் கண்ணன் ஆஜராகிறார். அப்பா மகன் இருவரும் எதிரெதிராக மோதிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும் போது படத்தின் ஸ்வாரஸ்யமும் கூடுகிறது.
தனது வாத திறமையால் ஆளுமையை வெளிப்படுத்திய பாரிஸ்டர் ரஜினிகாந்த்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போது அதை தாங்கி கொள்ள முடியாமல் உயிரை விடுகிறார். உயிரை விடும் அந்த தருவாயில் அவருக்கு நீதிபதி பதவி கிடைத்த நற்செய்தியை மகன் கண்ணன் சொல்ல வர அப்போது பாரிஸ்டர் இறந்து சரிந்து கிடைக்கும் காட்சியின் மூலம் கௌரவம் படத்திற்கே கௌரவம் சேர்த்து இருந்தார் சிவாஜி கணேசன்.
பாரிஸ்டர் ரஜினிகாந்த் மனைவியாக நடிகை பண்டரிபாய் வாழ்ந்து இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தின் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு வரிகளின் மூலம் ராஜாங்கம் செய்து இருப்பார் கவியரசு கண்ணதாசன். "பாலூட்டி வளர்த்த கிளி", "நீயும் நானுமா" போன்ற பாடல்கள் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்கள். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும் டி. எம். சௌந்தர்ராஜனின் வசீகரமான குரலும் மாயாஜாலம் செய்தன. இது போன்ற பொக்கிஷமான படங்கள் இனி உருவாக சாத்தியமே இல்லை. பார்த்து ரசிக்க மட்டுமே முடியும்.