Sudha Kongara : அடுத்தது சிம்புவா? சூர்யாவா? அப்டேட் சொன்ன தேசிய விருது இயக்குனர் சுதா கொங்கரா!
"இந்த படத்தை பற்றி எப்போது பேசினாலும் ட்ரெண்ட் ஆகும். படம் தொலைக்காட்சியில் வந்தபோதும், ஓடிடியில் வெளியான போதும், எப்போதும் சூர்யாவின் ரசிகர்கள் இதனை பற்றி பேசி ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள்."
சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் ஐந்து விருதுகளை வாங்கி குவித்துள்ளது. ஏர் டெக்கான் நிறுவனம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வில் நடந்த உண்மைக் கதையை மையமாக வைத்து, சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து இப்படத்தை இயக்கினார் சுதா. இதில் நடிகர் சூர்யா ‘மாறா’ என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கும் சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரரைப்போற்று
இந்த திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. அந்த சமயத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக சூரரைப்போற்று படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டனர். ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் வெற்றிகரமாக ரிசல்ட் தரமுடியும் என்று தமிழ் சினிமாவை முதன்முதலில் நம்பவைத்தது இந்த திரைப்படம்தான். வெளியானது முதல் மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை இப்படம் பெற்றது.
தேசிய விருது
தற்போது இப்படத்துக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு அங்கீகாரம் தான் ஐந்து தேசிய விருது. இப்படத்திற்கு மட்டும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை ஆகிய 5 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த மகிழ்ச்சியான தருணத்தை படக்குழு நேற்று கேக் வெட்டி கொண்டாடியது. நாம ஜெய்ச்சிட்டோம் மாறா என்று ரசிகர்களும் டேக் எழுத சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
சுதா கொங்கரா
இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் சூரரை போற்று திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி என்னும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் அதனை தெலுங்கிலும் ரீமேக் செய்தனர். அதையும் சுதா கொங்கராவே இயக்கினார். இதன்பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் சுதா கொங்கரா இயக்கி வெளியிட்ட படம் தான் சூர்யா நடிப்பில் வந்த சூரரைப் போற்று.
சூர்யா ரசிகர்கள்தான் காரணம்
இந்த திரைப்படத்தையும் இந்தியில் செய்துகொண்டிருக்கும் சுதா கொங்கரா, தேசிய விருது கிடைத்தது குறித்து செய்தியாளர்களிடம் உரையாடி உள்ளார். அவர் பேசுகையில், "இந்த படத்தை பற்றி எப்போது பேசினாலும் ட்ரெண்ட் ஆகும். படம் தொலைக்காட்சியில் வந்தபோதும், ஓடிடியில் வெளியான போதும், எப்போதும் சூர்யாவின் ரசிகர்கள் இதனை பற்றி பேசி ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். அவர்களது ஆதரவு தான் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம். சூர்யா சார் இல்லாம இது சாத்தியம் இல்லை" என்று பேசினார்.
அடுத்தது சிம்புவா? சூர்யாவா?
இந்தி ரீமேக் எந்த அளவில் உள்ளது என்று கேட்டபோது, "கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் முடிவடைந்தன. எடிட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. சீக்கிரம் ரெடி ஆகும், அதுவும் ரொம்ப நல்லா வந்துருக்கு", என்றார். அடுத்தது சூர்யா படமா சிம்பு படமா என்று கேட்ட கேள்விக்கு, "கண்டிப்பா சூர்யா திரைப்படம்தான். அதுல என்ன சந்தேகம். சிம்பு திரைப்படம் அப்புறம் தான். ஒன்னொன்னாதானே பண்ண முடியும்", என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்