Shruti Haasan: பனியில் பாட்டும், டான்ஸும்?.. வேணாமே! இயக்குநர்களிடம் கோரிக்கை வைத்த ஸ்ருதிஹாசன்
திரைப்பட இயக்குநர்களுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் வைத்துள்ள கோரிக்கை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
![Shruti Haasan: பனியில் பாட்டும், டான்ஸும்?.. வேணாமே! இயக்குநர்களிடம் கோரிக்கை வைத்த ஸ்ருதிஹாசன் Shruti Haasan requests filmmakers to not make heroines dance in snow: 'Just have to wear a blouse and saree' Shruti Haasan: பனியில் பாட்டும், டான்ஸும்?.. வேணாமே! இயக்குநர்களிடம் கோரிக்கை வைத்த ஸ்ருதிஹாசன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/10/3f0b47327ad5e01a83bc9ac7c90aa7951681096209566360_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திரைப்பட இயக்குநர்களுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் வைத்துள்ள கோரிக்கை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி, நாயகிகள் பனியில் நடனமாடுவது போன்ற பாடல்களை எடுக்காதீர்கள் என வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ருதிஹாசன்:
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் ஏழாம் அறிவு மூலம் அறிமுகமானாலும், தற்போது தெலுங்கில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் வெளியான வால்டர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும், வீர சிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்து இருந்தார். இந்நிலையில் திரைப்பட இயக்குனர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
”பனியில் பாட்டு வேண்டாமே”
அண்மையில் தனது ரசிகர்கள் உடன் கலந்துரையாடியபோது, ”பனியில் நடனமாடுவது என்பது எனக்கு பிடிக்காது. அது மிகவும் கடினமானது. நாயகர்களுக்கு கோட் இருக்கும். ஆனால், நாயகிகளுக்கு கோட், ஜாக்கெட் மற்றும் துப்பட்டா என எதுவுமே இருக்காது. புடவை மற்றும் ரவிக்கை மட்டுமே அணிந்து பனியில் நடனமாட வேண்டி இருக்கும். அதனை நிறுத்த வேண்டும் என கோரிக்கையாக வைக்கிறேன். இது தற்போதும் சினிமாக்களில் நடக்கிறதா என கேள்வி எழுப்பியதற்கு, அண்மையில் கூட நான் அதை செய்தேன்” என ஸ்ருதிஹாசன் பதிலளித்தார்.
சிரஞ்சீவி படத்தில் ஸ்ருதிஹாசன்:
வால்டர் வீரய்யா படத்தில் ஸ்ரீதேவி சிரஞ்சீவி பாடல் கூட, கொட்டும் பனிக்கு மத்தியில் ஆடும் வகையில் தான் படமாக்கப்பட்டு இருக்கும். இந்த பாடலில் சிரஞ்சீவி டீ-ஷர்ட், டெனிம்ஸ் மற்றும் பிளேசர் ஆகியவற்றை அணிந்து இருப்பார். ஆனால், ஸ்ருதிஹாசனோ ஒரு மெல்லிய புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் அணிந்து நடனமாடி இருப்பார். அந்த படத்தில் கிடைத்த மோசமான அனுபவத்தின் அடிப்படையில்தான், பனியில் நாயகிகள் நடனமாடுவது போன்ற பாடல்களை எடுக்க வேண்டாம் என இயக்குநர்களுக்கு ஸ்ருதிஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
சலார் படத்தில் ஸ்ருதிஹாசன்:
கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய நீல் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் சலார். இந்த படித்தில் நாயகி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் அண்மையில் சலார் படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்தும் படம்பிடித்து முடிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆத்யா எனும் கதாபாத்திரத்தில் அவர் இந்த படத்தில் நடித்துள்ளார். முதன்முறையாக பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆக்ஷன் கதையாக இருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் சலார் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். கே.ஜி.எஃப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பிரசாந்த் மற்றும் பிரபாஸ் முதன்முறையாக சலாரில் இணைந்துள்ளனர். இது கன்னட படமான உக்ரம்மின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)