Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
தனக்கு கேன்சர் இருந்ததையே மறைத்து விட்டார் என திரை பிரபலங்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

நடிகர் மதன் பாப் புற்று நோய் பாதிப்பால் நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் மறைவு செய்தியறிந்த திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் மதன் பாப் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து இயக்குநர் சந்தான பாரதி அஞ்சலி செலுத்திய பின் கண்ணீர் விட்டு அழுகும் காட்சி மனதை உலுக்கியுள்ளது.
இயக்குநர் எஸ்.ஏ.சி வருத்தம்
மதன் பாப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய சந்தானபாரதி, மதன் பாப்பிற்கு இப்படி ஒரு நோய் இருப்பதே தெரியாது. அவர் இருந்தாலே அந்த இடமே கலகலப்பா இருக்கும். எங்களுக்கு ஒரு நல்ல நண்பன் என வேதனையுடன் தெரிவித்தார். அதன் பின்னர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மதன் பாப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்பு பேசிய அவர், மதன் பாப்பின் குடும்பம் இசைக்குடும்பம். அவர் நடிகர் ஆவதற்கு முன்பே இசையால் இணைந்த குடும்பம் எங்களுடையது. அவரது சிரிப்பை யாராலும் மறக்க முடியாது. மதன் பாப் இறந்த செய்தி கேட்டு ரொம்ப வருத்தப்பட்டேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
கேன்சர் இருந்ததை சொல்லவில்லை
இவர்களை தொடர்ந்து இயக்குநர்கள் வாசு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் மதன் பாப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சிரிப்பால் தன் அனைவரையும் கவர்ந்தவர். அவர் இன்று இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார்கள். பின்னர் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், தனக்கு கேன்சர் வந்தத வெளியில சொல்லவே வேணாம்னு இருந்துட்டான். எனக்கு அவன் ரொம்ப நெருங்கிய நண்பன். அவனை மாதிரி யாராலும் சிரிக்க வைக்க முடியாது. அவனை இழந்துவிட்டோம் என வேதனையுடன் தெரிவித்தார்.





















