இந்தியன் 2 பட பிரச்சனை.. ஷங்கர்-லைகா., சமரச பேச்சுவார்த்தை தோல்வி !
இந்தியன் 2 திரைப்படத்தை முடித்து கொடுக்குமாறு லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண நீதிமன்றம் கடந்த முறை வழக்கு விசாரணையில் அறிவுறுத்தி இருந்தது.
‘இந்தியன் - 2’ திரைப்படத்தை முடித்துக்கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்கு தடைவிதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றுகூறி, இதுதொடர்பாக ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15-ஆம் தள்ளிவைத்தது. அதன்பின்னர் நடந்த விசாரணையில் இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பு நிறுவனமும் பேசி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்துக் கொடுப்பதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் லைகா நிறுவனம் சார்பில் படத்தை ஜூன் மாதத்திற்குள் முடித்து கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை இழுபறி நீடித்தது. இறுதியில் இந்த முடிவும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் பிற படங்களை ஷங்கர் இயக்க லைகா எதிர்ப்பு தெரிவித்து வழக்கை தொடர்ந்து, அதற்கு தனி நீதிபதி தடைவிதிக்க மறுத்த நிலையில், மேல்முறையீடு செய்துள்ளது.