நாட்டில் இருக்க தகுதி இல்லாதவர்..ஷாருக் கான் மீது பாயும் பாஜக தலைவர்கள்..ஏன் தெரியுமா?
ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச வேகபந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவதால் அவருக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

2026 ஆம் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் வங்கதேச வேகபந்து வீச்சாளரான முஸ்தாபிசுர் ரஹ்மானை 9 கோடிக்கு ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் எடுத்தது. வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு எதிராக தொடர் வன்முறை சம்பவன்கள் நடந்து வரும் நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரரை ஏலத்தில் எடுத்ததற்காக ஷாருக் கான் மீது பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
வங்கதேசத்தில் தொடரும் வன்முறை
வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது முதல் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. ஏற்கனவே இருந்த ஆட்சி கவிழ்ந்து புதிதாக அமைக்கப்பட்ட ஆட்சியும் நிலையில்லாமல் இருந்து வருகிறது. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தீபு சந்திர ஃதாஸ் என்ற இந்து இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதோடு, அவரது உடலை இழுத்துவந்து சாலையில் பேட்ட அந்த கும்பல், தீ வைத்து எரித்தது. இச்சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளான நிலையில், அடுத்தடுத்து இந்தியர்களின் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன . கடந்த 15 நாட்களில், 4 இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.
ஷாரு கானுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு
2026 ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் துபாயில் ஏலம் நடைபெற்றது. வங்கதேச வேகப்பந்து விச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த வீரரை ஏலத்தில் எடுத்தது பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச பாஜக தலைவர் சங்கீத் சோம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஷாருக் கானை தேசதுரோகி என்று குறிப்பிட்டார். அவர் பேசுகையில் " ஒருபக்கம் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதே நாட்டு வீரர்களை ஏலத்தில் வாங்குகிறார்கள். அந்த நாட்டின் வீரரை ஏலத்தில் எடுத்த ஷாருக் கான் ஒரு தேசதுரோகி. இந்த மாதிரியான தேசதுரோகிகள் இந்த நாட்டிலேயே வாழ தகுதியில்லாதவர்கள்." என அவர் ஷாருக் கானை கடுமையாக விமர்சித்து பேசினார்.





















