"நீங்க இல்லனா நான் இல்லை" - ரசிகர்களுக்கு ஃபேன் பேஜ் மூலம் நன்றி தெரிவித்த சமந்தா
13 ஆண்டுகால திரைப்பயணத்தை கடந்த நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு சோசியல் மீடியா மூலம் நன்றிகளை தெரிவித்து கொண்டார்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா 2010ல் தெலுங்கில் வெளியான 'யே மாயா சேசவே' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.
அறிமுகமே அசத்தல் :
2012ம் ஆண்டு வெளியான 'நீ தானே என் பொன்வசந்தம்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதே ஆண்டில் சமந்தா நடித்த 'ஈகா' திரைப்படமும் வெளியானது. தெலுங்கு திரையுலகை போலவே தமிழிலும் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதனை தொடர்ந்து சமந்தாவின் திரைப்பயணம் ஏறுமுகமாகவே இருந்தது. தூக்குடு , சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு, அட்டாரின்டிகி தாரேதி, கத்தி, தெறி, மெர்சல், ரங்கஸ்தலம் என தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
2021 ஆம் ஆண்டில் அமேசான் பிரைமில் வெளியான தி ஃபேமிலி மேன் என்ற த்ரில்லர் தொடரில் நடிகை சமந்தாவின் சிறப்பான நடிப்பு பாராட்டுகளை குவித்தது. அந்த வகையில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் OTT விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேற லெவல் பப்ளிசிட்டி :
பிரபலத்தின் உச்சியில் இருந்த சமந்தாவின் திரைவாழ்க்கையில் கீரிடம் சூட்டப்பட்டது 'புஷ்பா : தி ரைஸ்' திரைப்படத்தில் அவர் ஆடிய " ஊம் சொல்றியா மாமா... ஊஹூம் சொல்றியா மாமா" பாடலுக்கு பிறகு தான். இந்த பாடலுக்கு பிறகு அவரின் லெவல் வேறு இடத்திற்கு எகிறியது. சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் சமந்தா ஏதாவது ஒரு வகையில் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதில் இருந்து தவறுவதில்லை.
ரசிகர்களுக்கு நன்றி :
சோசியல் மீடியாவில் அவ்வப்போது வொர்க் அவுட் போஸ்டுகள், போட்டோஷூட்கள், திரைப்பட விளம்பரங்கள் அல்லது தனது ஹாலிடே போஸ்ட்கள் என ஏதாவது ஒன்றை பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அவரின் போஸ்ட்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் மூலமும் கமெண்ட் மூலமும் அவர்களின் அன்பை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா தனது 13 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் ட்விட்டரில் தனது ரசிகர்கள் பக்கம் மூலம் அனைத்து ரசிகர்களும் நன்றிகளை தெரிவித்துள்ளார். " உங்களுடைய அன்பை நான் உணர்கிறேன். இந்த அன்பு தான் என்னை முன்னோக்கி செல்ல வைக்கிறது. இன்று மட்டுமின்றி 13 ஆண்டுகளாக நான் நானாகவே இருப்பதற்கு நீங்கள் தான் காரணம்" என பதிவிட்டு இருந்தார் சமந்தா.