Samantha: நயன்தாரா, கீர்த்தி சுரேஷூடன் இணைந்து நடித்ததில் கஷ்டமா? - சட்டென சமந்தா அளித்த பதில்..!
Samantha: சாகுந்தலம் படத்தில் நாயகியாக நடித்துள்ள சமந்தா, அப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தான் அழுதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமன்றி பாலிவுட்டிலும் கால் பதித்த நடிகை சமந்தா. தெலுங்கு இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நாயகியாக நடித்ததுள்ள இவர், அப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பெரிய கதாநாயகிகளுடன் படத்தில் இணைந்து நடிப்பது குறித்த கேள்விக்கு அவர் அழகாக பதிலளித்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விழா மேடையில் அழுகை!
டோலிவுட்டில் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளவர் குணசேகர். இவரது இயக்கத்தில் சமந்தா நடித்து, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ள படம்தான் சாகுந்தலம். இப்படத்தில், சமந்தாவிற்கு ஜோடியாக துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகன் என்ற நடிகர் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி மாதம் நடைப்பெற்றது. படத்தின் இயக்குனர் குணசேகர் இவ்விழாவில் பேசிக்கொண்டிருந்த போது, நடிகை சமந்தா கண் கலங்கி அழ ஆரம்பித்து விட்டார்.
சமந்தாவின் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வட்டமடிக்க தொடங்கியதை தொடர்ந்து, அது குறித்த பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. ஒருவர், “சமந்தா தனது வாழ்க்கையை பல இன்னல்களை கடந்து வந்ததால் இப்போது அந்த துக்கம் தாளாமல் அழுகிறார்” என்று கூற, ஒரு சிலரோ “சமந்தாவிற்கு நோய் முற்றியதால்தான் அழுகிறார்” என வதந்தியை கிளப்பி விட்டனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தான் அழுததற்கான உண்மையான காரணத்தை சமீபத்தில் நடைப்பெற்ற நேர்காணல் ஒன்றில் சமந்தா கூறியுள்ளார்.
"இயக்குனரால்தான் அழுதேன்.."
சாகுந்தலம் படம் இன்னும் சில வாரங்களில் வெளியாவதால், அப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, சமந்தா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், அவரிடம் பட விழாவில் அவர் அழுதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சமந்தா, பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
“நான் எனக்காக அந்த நிகழ்ச்சியில் அழுதேன் என பலர் நினைத்து கொண்டனர். ஆனால், அந்த பட விழாவில் இயக்குனர் குணசேகர் அழுதார். அவர் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எனக்கு தெரியும். அவரது மொத்த குடும்பமே இதற்காக டீமாக உழைத்தனர். எனக்கு அவருடைய உழைப்பு புரிந்தது. இதனால்தான், அந்த இடத்தில் நான் எமோஷனல் ஆனேன்” என்று கூறினார்.
“வேறு நாயகியுடன் நடிப்பதில் சிக்கல்..”
நடிகை சமந்தா, மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்த அனுபவம் குறித்தும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயந்தாராவுடன் நடித்த அனுபவம் குறித்தும் மேற்கூறிய நேர்காணலில் பேசினார். அப்போது, அவர்கள் போன்ற பெரிய கதாநாயகிகளுடன் படத்தில் இணைந்து நடிப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை. என கூறினார்.
சாகுந்தலம் ரிலீஸ்:
நடிகை சமந்தா, சில மாதங்களுக்கு முன்னர் மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சாகுந்தலம் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதிலும், அந்த நோயின் தாக்கம் குறித்தும் தனது நிலை குறித்தும் சமந்தா வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
சாகுந்தலம் படம், மகாபாரதத்தில் வரும் சாகுந்தலா எனும் கதாப்பாத்திரம் குறித்த கதையாகும். இதில் நடித்திருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என சமந்தா தெரிவித்துள்ளார். இப்போது அவர், கைவசம் குஷி எனும் தெலுங்கு படமும் சிட்டெடல் எனும் இந்தி படமும் உள்ளது. இந்த படங்களை முடித்த பிறகு, தான் சில நாட்கள் ஓய்வில் இருக்கப்போவதாகவும் அதன் பிறகு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.