Darshan: மன்னிப்புக் கேட்க சென்றவரை கொடூரமாக அடித்து கொலை... நடிகர் தர்ஷன் வழக்கில் புதிய திருப்பம்
ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலி கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்த விசாரணையில் மேலும் சில உண்மைகள் தெரியவந்துள்ளன
கொலை செய்யப் பட்ட ரேணுகா சுவாமி கடத்திச் செல்லப் படவில்லை என்றும் அவர் சமாதானம் பேசுவதற்காக தர்ஷனின் ரசிகர் மன்றத்தினர் சார்பாக அழைத்துச் செல்லப் பட்டார் என்று டாக்ஸி டிரைவர் ரவியின் வாக்குமூலம் இந்த வழக்கில் பல்வேறு குழப்பங்களுக்கு விடையாக அமைந்துள்ளது.
ரேணுகா சுவாமி கொலையின் கைதான கன்னட நடிகர் தர்ஷன்
பெங்களூரு காமாட்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி ரேணுகா சுவாமி என்பவரின் உடல் இறந்த நிலையில் கண்டறியப் பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மருந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ரேணுகா சுவாமியின் உடல் என்றும், மழைநீர் வடிகாலில் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்
ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டதாக தடயவியல் துறை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு 10 நபர்களை காவல்துறை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனை விசாரணை செய்தனர். ஏற்கனவே விஜயலட்சுமி என்பவருடன் திருமண உறவில் இருந்துகொண்டே நடிகை பவித்ரா கெளடாவை காதலித்து வருவது , விலங்குகளை வேட்டையாடுவது , என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகர் தர்ஷன்.
தர்ஷனின் காதலியான பவித்ரா கெளடாவை ரேணுகா சுவாமி சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசியதாகவும் இதனால் தர்ஷன் கூலிப்படையை ஏவி ரேணுகாவை கொலை செய்திருக்கலாம் என்கிற பார்வையில் இந்த விசாரணையை தொடர்ந்தார்கள் காவல் துறையினர். தர்ஷன் அவரது காதலி பவித்ரா கெளடாவை 7 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைக்க நீதிபதி உத்தரவிட்டது.
டாக்ஸி டிரைவர் ரவி கொடுத்த வாக்குமூலம்
இந்த கொலை வழக்கில் சிசிடிவி ஆதாரங்கள் காவல்துறைக்கு பெரிய ஆதரவாக இருந்தாலும் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெங்களூருக்கு எப்படி கடத்தி வரப்பட்டார் என்கிற கேள்வி இருந்தது. இப்படியான நிலையில் ரேணுகா தேவியை சித்ரதுர்காவில் இருந்து பெங்களூர் வரை கொண்டு வந்து இறக்கிவிட்ட டாக்ஸி டிரைவர் இந்த கேள்விக்கான பதிலாக பல உண்மைகளை தெரிவித்துள்ளார்.
சித்ரதுர்காவில் ராகவேந்திரா என்பவர் நடிகர் தர்ஷனின் ரசிகர் மன்றத்தை நிர்வகித்து வருகிறார் . ரேணுகா சுவாமியை நடிகர் தர்ஷனை சந்தித்து பேசி சமாதானத்திற்கு வரும்படி அழைத்துச் சென்றவர் ராகவேந்திரா. சமூக வலைதளத்தில் பவித்ரா கெளடாவை தவறாக பேசியதற்காக தர்ஷனிடம் மன்னிப்பு கேட்க அழைத்துச் செல்வதாக சொல்லி தான் ரேணுகா அழைத்துச் செல்லப் பட்டார் என்று அவர் கடத்தப் படவில்லை என்று டாக்ஸியை ஓட்டிச் சென்ற ரவி தெரிவித்துள்ளார். ஆனால் கொலை நிகழ்ந்த பின் ரவி சென்று தலைமறைமாகி விட்டார். பின் தனது டாக்ஸி ஏஜன்சிக்கு ஃபோன் செய்து எல்லா உண்மைகளையும் செய்துள்ளார் ரவி. ஏஜன்சி வழங்கிய ஆலோசனையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி காவல் துறையில் சரணடைந்து தனக்கு தெரிந்த எல்லா உண்மைகளையும் தெரிவித்துள்ளார் ரவி.
ரேணுகா சுவாமியை அழைத்துச் சென்று ஒரு ஷெட்டில் வைத்து பெல்ட்டால் தர்ஷன் அடித்துள்ளார் என்றும் தர்ஷனின் அடியாட்கள் ரேணுகா சுய நினைவை இழக்கும் வரை அவரை கம்பால் அடித்ததாகவும் ரவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. ரேணுகா சுவாமியின் உடலில் மொத்தம் 14 தீவிர காயங்கல் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. சம்பவ இடத்தில் இருந்த லாரியில் ரேணுகாவின் தலை பலமாக மோதியதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது இந்த கொலை பழியை ஏற்றுக் கொள்ளும் படி 3 நபர்களுக்கு தர்ஷன் தலா 5 லட்சம் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
ரேணுகா சுவாமியின் கொலை வழக்கு கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தர்ஷனுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் தொடங்கியுள்ளன. மறுபக்கம் நடிகர் தர்ஷனுக்கு ஆதரவாக காவல்துறைக்கு அரசியல் தலைவர்கள் சார்பில் இருந்து அழுத்தங்கள் வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அரசியல் பிரமுகர்கள் சார்பாக எந்த அழுத்தமும் காவல்துறைக்கு வரவில்லை என்று கன்னட துணை முதலமைச்சர் ஷிவகுமார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அடுத்தடுத்த விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறார்கள்