Rajinikanth - Vijay: என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்... ரஜினியை மீண்டும் சீண்டிய விஜய் ரசிகர்கள்!
மதுரையில் நடிகர் ரஜினிகாந்தை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் வைத்துள்ள போஸ்டர் ஒன்று மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?, ரஜினிகாந்த் vs விஜய் ரசிகர்கள் இடையேயான சலசலப்பு இவை தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்!
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராகவும் சூப்பர் ஸ்டாராகவும் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே இந்த ஆண்டு வாரிசு பட ப்ரொமோஷன்கள் தொடங்கி தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என திரைத்துறையினர் முதல் ரசிகர்கள் வரை கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் அடையாளமாகவும் உச்ச நட்சத்திரமாகவும் வலம் வருவதுடன், கோலிவுட் தொடங்கி வெளிநாடுகள் வரை சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் கொண்டாடித் தீர்க்கப்பட்டு வரும் நிலையில், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதா என ரஜினி ரசிகர்கள் இணையத்தில் கொந்தளிக்கத் தொடங்கினார்.
பட்டத்த பறிக்க நூறு பேரு
ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையேயான இந்த இணைய மோதல் போக்கு தொடர்ந்து வந்த நிலையில், ஜெயிலர் பட ப்ரொமோஷன்களில் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஹூக்கும்’ பாடலில் “உங்கப்பன் விசில கேட்டவன்... பட்டத்த பறிக்க நூறு பேரு” உள்ளிட்ட அட்டாக் வரிகள் இடம்பெற்ற நிலையில், விஜய் ரசிகர்கள் மேலும் இணையத்தில் கொந்தளிக்கத் தொடங்கினர்.
மேலும் சென்ற வாரம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் சொன்ன காகம் - பருந்து கதை வைரலாகி, இந்த விவகாரம் தீயாய் கொழுந்து விட்டெறியத் தொடங்கியது.
பரபரப்பு போஸ்டர்
சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டுமென நினைக்கும் நடிகர்களுக்காக ரஜினி இந்த குட்டி ஸ்டோரியைக் கூறியதாக ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வந்தனர். மேலும் வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் இதற்கு பதிலளித்து பேசுவார் எனவும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள போஸ்டர் ஒன்று மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. “என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்” எனும் வாசகத்துடன் ரஜினி புகைப்படம் சிறியதாக இருக்க, விஜய் புகைப்படம் பெரியதாக இடம்பெற்றிருக்க வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க: Friendship Day 2023 Memes: 'என்னை பிடிச்ச சனி.. சர்வதேச நண்பர்கள் தினத்தில் ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்!