(Source: ECI/ABP News/ABP Majha)
Rajinikanth on Chandrayaan 3: அசத்திட்டீங்க போங்க... இஸ்ரோ டீமுக்கு சபாஷ்.. பெருமை பொங்க ரஜினிகாந்த் பதிவு!
Rajnikanth on Chandrayaan 3: சந்திரயான் - 3 வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
‘சந்திரயான் 3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியதை நாடே கொண்டாடிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,” அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் சாதனையை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இந்தியா மாபெரும் சாதனையால் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில், முதன்முறையாக, இந்தியாவின் சந்திரயான் - 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இது தேசத்திற்கு பெருமைக்குரிய தருணம். எங்களை பெருமையடைய செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரோவின் மாபெரும் கனவுத்திட்டம் - சாதனை
நிலாவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று (23/08/2023) மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது. இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை இஸ்ரோ தரையிறக்கியது. இதன் மூலம், நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டும் இன்றி, இதற்கு முன்னதாக, மூன்று நாடுகள் மட்டுமே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துள்ளது.
இந்த வரலாற்று சாதனையை உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கொண்டாடி வருகின்றனர். திரைபிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் அமிதாப் பச்சன், காந்தார திரைப்பட பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டி, நடிகர் மாதவன், தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி, நடிகை பார்வதி, நடிகர், அரசியல்வாதி கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சிரஞ்சீவி, மோகன் லால் ஆகியோர், இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் வைரமுத்து எனப் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாரட்டி வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.
ஏ,ஆர்.ரஹ்மான் பாராட்டு:
இஸ்ரோவின் சாதனையை கொண்டாடும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய வந்தே மாதரம் பாடலின் வீடியோவை சோனி மியூசிக் பகிந்துள்ளது. அதை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ரீஷேர் செய்துள்ளார். மேலும் இந்த ஈடுஇணையில்லாத சாதனையை என்றும் நினைவில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாருக்கான் வாழ்த்து:
'சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்' என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.
தரையிறங்கும் ரோவர்:
இந்த நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக பிரக்யா ரோவரை தரையிறக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும் இந்த பிரக்யா ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பிரக்யா ரோவரின் வேகம் அதன் செயல்பாட்டை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக செல்லும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சுமார் 2 மணி நேரத்தில் பிரக்யா ரோவர் தனது பணியை தொடங்கும் என்று ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்தது. இதன்படி, தற்போது பிரக்யா ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து தனது பணியை தொடங்கியுள்ளது. இதற்காக விக்ரம் லேண்டரில் சாய்வு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.