ரஜினி கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்: தஞ்சையில் களைகட்டிய ‘கூலி’ செலிப்ரேஷன்
கூலி திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் , டிரைலர் வெளியீடு, இசை வெளியீடு என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே வந்தது.

தஞ்சாவூர்: நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தஞ்சையில் 9 திரையரங்குகளில் ரஜினியின் கூலி திரைப்படம் தான் இடம் பிடித்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷபிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘ஏ’ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் படத்தின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன

கூலி திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் டீசர் வெளியீடு, டிரைலர் வெளியீடு, இசை வெளியீடு என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே வந்தது. படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் வெகு தீவிரம் காட்டினர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டிக்கெட் புக்கிங் பற்றி அறிவிக்கப்பட்டது முதல் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.
ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கூலி திரைப்படம் இன்று காலை உலகம் முழுவதும் சுமார் 7000 தியேட்டர்களில் வெளியானது. தமிழகத்தில் சுமார் 700 தியேட்டர்களில் கூலி படம் வெளியானது. கடந்த 8ம் தேதி படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்தார்கள். டிக்கெட் முன்பதிவிலேயே இப்படம் 100 கோடியை நெருங்கி விட்டதாக தகவல்கள் ெளியானது.
இதுவரை எந்த தமிழ் சினிமாவிற்கும் டிக்கெட் முன்பதிவில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என சொல்லும் அளவுக்கு கூலி படம் பெரிய சாதனைகளை செய்தது. கேரளாவில் முன்பதிவிலேயே ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழகத்திலும் ரூ.15 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் ரூ.18.90 கோடி வசூல் ஆகியுள்ளது. இந்திய அளவில் மொத்தமாக ரூ.55.5 கோடியும், வெளிநாடுகளில் ரூ.57.75 கோடியும் முன்பதிவில் வசூலாகி உள்ளது. மொத்தத்தில் உலக அளவில் டிக்கெட் முன்பதிவில் கூலி திரைப்படம் ரூ.112.80 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ரிலீசுக்கு முன்பு கூலி திரைப்படம் முன்பதிவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட இதையே படத்தின் முதல் நாள் வசூலாகவும் எடுத்துக் கொள்ள முடியும். அடுத்த 3 நாட்களுக்கு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் ஹவுஸ்ஃபுல்லாகியுள்ளன. இதனிடையே நேற்று படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘இந்தப் படம் எல்சியுவில் வராது, ரஜினிக்கான பிரத்யேகமான கதையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.
இன்று தஞ்சாவூர் விஜயா திரையரங்கில் கூலி படம் வெளியானதை ஒட்டி, ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து, சூடம் காட்டி, தேங்காய் உடைத்து பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தஞ்சையில் 9 திரையரங்குகளில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாகி உள்ளது
இதில் தஞ்சை விஜயா திரையரங்கம் முன்பு திரண்ட ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் வாழ்க என முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக திரையரங்கம் வந்தனர். திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனருக்கு பெண்கள் மற்றும் ஆண்கள் பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.





















