39 years of Kanni Rasi: பகுத்தறிவை புகுத்திய ”கன்னி ராசி” .. பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமான நாள்!
39 years of Kanni Rasi : ஒட்டுமொத்த ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி விழா கொண்டாடிய 'கன்னி ராசி' திரைப்படம் வெளியான நாள் இன்று.
80ஸ் காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலமாக விளங்கிய காலகட்டம். அந்த காலகட்டத்தில் அத்தனை தரமான திரைப்படம் வெளியானது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல உயரங்களை எட்டியவர்கள் பலர். ஆனால் அதில் இயக்குநராகவும், ஹீரோவாகவும் கலக்கி அதில் வெற்றி பெற்ற சிலரில் ஒருவர் தான் ஆர். பாண்டியராஜன்.
இயக்குநர் கே. பாக்யராஜ் சிஷ்யர்களில் மிகவும் துடிப்பான கெட்டிக்காரராக இருந்த ஆர். பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'கன்னி ராசி'. 1985ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 39 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பிரபு, ரேவதி, கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், சுமத்ரா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் ஒட்டுமொத்த ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. முதல் படத்திலேயே யாருப்பா இந்த படத்தோட இயக்குநர் என திரும்பி பார்க்க வைத்த ஒரு இயக்குநராக பிரபலமானார் ஆர். பாண்டியராஜன்.
கன்னி ராசி படத்தின் பிரிவியூ காட்சி திரையிடப்பட்டதுமே விநியோகஸ்தர்கள் உடனே படத்தை வாங்க முன்வந்துள்ளனர். அதற்கு காரணம் படத்தின் அசத்தலான திரைக்கதை. நிச்சயம் இப்படம் வெற்றி பெறும் என அன்றே முடிவெடுத்துவிட்டனர். நகைச்சுவை, காதல் என்ற கலவையில் இப்படம் வெளியாகி இருந்தாலும் அதில் பகுத்தறிவையும் அப்படத்தின் மூலம் புகுத்தி இருந்தார் ஆர். பாண்டியராஜன்.
செவ்வாய் தோஷம் என்பது இன்றும் நம்பப்படுகிறது. ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்தவர் பாண்டியராஜன் தான். தாய்மாமன், அக்கா மகள் என்ற உறவில் இருக்கும் பிரபு, ரேவதி இடையே காதல் மலர்கிறது. பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால், செவ்வாய் தோஷம் இருக்கும் ஆண்மகனை தான் அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அப்படி திருமணம் நடைபெறவில்லை என்றால் மணமகன் இறக்க நேரிடும் என்பது நம்பிக்கை.
ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்து தாய்மாமன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். கிளைமாக்ஸில் மாமாவுக்கு எதுவும் நேர்ந்து விட கூடாது என்பதற்காக ரேவதி இறந்து போவது போல படம் முடிக்கப்பட்டு இருக்கும். இந்த முடிவுக்கு பல விமர்சனங்கள் எழுந்தாலும், பாண்டியராஜன் இயக்கத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்த படம் வெளியானதும் அனைவரும் யார் அந்த புரட்சி இயக்குநர் என தேடும் போது இவர் தானா என பாண்டியராஜனை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்ட சுவாரஸ்யங்களும் உண்டு.
முதல் படத்திற்கு கிடைத்த வெற்றி பாண்டியராஜனை மேலும் ஊக்குவித்து அடுத்தடுத்து பல தரமான வெற்றிப்படங்களை கொடுக்க உந்துதலாக இருந்தது.
இளையராஜாவின் இசை, கவுண்டமணி - பிரபு காமெடி, ஜனகராஜின் ஒருதலை காதல், ரேவதி - பிரபு காதல் என அனைத்துமே கன்னி ராசி படத்தின் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்து வெற்றி விழா கொண்டாட வைத்தது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய படங்களின் பட்டியலில் நிச்சயம் கன்னி ராசி படம் இடம்பெறும் என்றால் அது மிகையல்ல.