அஜித் படத்தால்தான் சினிமாவை விட்டு விலகினேன்.. காஜா மைதீன் சொன்ன பகீர் தகவல்!
அஜித் படத்தால்தான் சினிமாவை விட்டே விலகினேன் என்று தயாரிப்பாளர் காஜா மைதீன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளராக உலா வந்தவர் காஜா மொய்தீன். இவரது தயாரிப்பு நிறுவனமான ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்த படங்கள் தமிழ் திரையுலகின் வெற்றிப் படங்களான கோபாலா கோபாலா, பொற்காலம், ஆனந்தப் பூங்காற்றே, பாட்டாளி, பெண்ணின் மனதை தொட்டு, வாஞ்சிநாதன், தேவதையை கண்டேன், சார்லி சாப்ளின், பேரரசு போன்ற பல வெற்றிப்படங்களை தந்தவர்.
சினிமாவை விட்டு விலகியது ஏன்?
1996ம் ஆண்டு அறிமுகமான இவர் 2006ம் ஆண்டு வரை 14 படங்கள் தயாரித்த நிலையில் திரையுலகில் இருந்து விலகினார். அவர் திரையுலகில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து யூ டியூப் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, ஜனா படம் பண்ணேன். அஜித்தை வச்சு பண்ணேன். அந்த படத்தில் நான் பழிவாங்கப்பட்டேன். என்னை அறியாமல் நான் அந்த படத்தில் மாட்டிக்கொண்டேன். சக்கரவர்த்தி என்ற தயாரிப்பாளர் இருந்தார். அப்போது அஜித்திற்கு ஆலோசகர் என எல்லாமே அவர்தான். அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் அஜித் கேட்பார்.
அஜித்தை தவறாக வழிநடத்தினார்:
அவர் அஜித்தை தவறாக வழிநடத்தினார். அவர் பேச்சைக் கேட்டு என் படத்தை 3 வருடம் இழுத்தனர். ஜனா படத்தின் உண்மையான கதை மலையாளத்தில் இருந்து வாங்கிய படம். ஜனா படத்திற்கு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அந்த படத்தின் உரிமத்தை வாங்கினேன்.

நான் உரிமம் வாங்கிய படத்தை இதே அஜித்தை வைத்து வேறு ஒரு இயக்குனரை வைத்து சக்கரவர்த்தி தயாரித்தார். தேவையில்லாமல் என்னை தாமதப்படுத்தி 3 வருஷம் இழுத்தனர். கடைசியில் அந்த படம் மிகப்பெரிய ஃபளாப். அந்த சமயத்தில் எனக்கு ரூபாய் 10 கோடி வரை நஷ்டம். முதல் பெரிய அடி.
10 கோடி ரூபாய் நஷ்டம்:
சந்தித்த வேளை நஷ்டம்தான். ஆனால், அவ்வளவு பெரிய நஷ்டம் இல்லை. ஜனாதான் எனக்கு மிகப்பெரிய இழப்பு. சார்லி சாப்ளின், தேவதையை கண்டேன், அள்ளித்தந்த வானம் ஓகே ஓகே படங்கள். ஆனால், இந்த 10 கோடி ரூபாயை மீட்டுக் கொடுக்கும் அளவிற்கு எந்த படமும் பெரிதாக ஹிட்டாகவில்லை. கமலின் வேட்டையாடு விளையாடு படத்திற்கு நான்தான் தயாரிப்பாளர். விஜயகாந்தின் பேரரசு பெரிய ஹிட்.

அதன்பின்பு, நான் வேறு ஒரு தயாரிப்பாளருக்கு கொடுத்தேன். கமல் மற்றும் இயக்குனருக்கு பணம் கொடுத்து பெரிய கடனாகியது. கையில் இருந்த பணம் எல்லாம் போய்விட்டது. ஒரு கடன் காரனாகும் சூழல் வந்துவிட்டது. பெங்களூர் சென்றுவிட்டேன்.
முட்டாள்கள்:
யாராவது ஒருவரை தயாரிப்பாளரை இந்த நடிகர், இயக்குனர் தூக்கிவிட்டார் என்று ஒருவரை சொல்லுங்கள். பணம் போடும் இயக்குனருக்கு மூளை இல்லை என்று நினைப்பார்கள். கமிட் ஆகும் வரை ஒரு மாதிரி இருப்பார்கள். கமிட்டான பிறகு அவர்கள் சுயரூபம் ஒரு மாதிரி இருக்கும். தயாரிப்பாளர் என்றாலே முட்டாள். படம் எடுக்கும் அளவிற்கு இருப்பவருக்கு புத்தி இருக்காது. தயாரிப்பாளருக்கு ஏதுமே தெரியாது என்று நினைக்கிறார்கள்.
தயாரிப்பாளர் வரும்போதே தயாரிப்பாளர். ஏதோ ஒன்றில் சம்பாதித்துதானே வருகிறார். அவர் சொல்வதை கேட்கவே மாட்டார்கள். வெற்றி பெற்றால் கொண்டாடுவது அவர்கள். நஷ்டமாகிவிட்டால் முழு பொறுப்பு தயாரிப்பாளர். ஒரு பரிந்துரை சொன்னால் கேட்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் ஆதங்கத்துடன் கூறினார்.
அஜித்துடன் ஏற்கனவே இணைந்து ஆனந்த பூங்காற்றே படத்தை 1999ம் ஆண்டு வெற்றிப்படமாக கொடுத்தவர் ரோஜா கம்பைன்ஸ். அதன்பின்பு, 2004ம் ஆண்டு வெளியான ஜனா படம் தோல்விப் படமாக அமைந்தது. இந்த படம் அஜித்தின் திரை வாழ்விலும் மிகப்பெரிய சறுக்கலாக அமைந்தது.
சக்கரவர்த்தி - அஜித்:
அஜித்தின் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சனேயா, ஜி, வரலாறு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்எஸ் சக்கரவர்த்தி ஆவார். ஆனால், அவருக்கும் அஜித்திற்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்ட பிறகு இருவரும் பிரிந்தனர். கடைசியாக அவர் 2015ம் ஆண்டு சிம்புவை வைத்து வாலு படத்தை தயாரித்திருந்தார். சக்கரவர்த்தி கடந்த 2023ம் ஆண்டு உயிரிழந்தார். அஜித்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய ஏற்றம் தந்த வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன் மற்றும் வரலாறு படத்தை சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.






















