(Source: ECI/ABP News/ABP Majha)
நன்றி கெட்டவன்.. ரசிகர்களை கண்டுக்குறதே இல்லை.. கடுமையாக விமர்சித்த கே. ராஜன்.. யாரை தெரியுமா?
K. Rajan : நடிகர் விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத நடிகர்களை கடுமையாக விமர்சித்த கே. ராஜன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் திறம்பட செயல்பட்டவர் கேப்டன் விஜயகாந்த். பல ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாதம் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
விஜயகாந்தின் இழப்பு திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே புரட்டிப்போட்டது. அவரின் முகத்தை ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து அவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஒரு சிலர் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்தனர்.
விஜயகாந்த் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாத நடிகர் வடிவேலு பற்றி ஏராளமான கண்டனங்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரை பற்றியும் மிகவும் வெளிப்படையாக தன்னுடைய கருத்தை பொது இடங்களில் பேசுவது தயாரிப்பாளர் கே. ராஜன் வழக்கம். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே. ராஜன் தமிழ் சினிமாவின் நடிகர்களை பற்றியும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதில் விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத நடிகர் வடிவேலு பற்றியும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
கே. ராஜன் பேசுகையில் "அஜித் என ஒரு நடிகர் இருக்கிறார். ரசிகர்களை சந்திப்பதில்லை, மக்களை பார்ப்பதில்லை ஆனால் அவர்கள் மூலம் வரும் கோடிகளை மட்டும் பார்க்கிறார். விஜய் அரசியலுக்கு வருவதற்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். மக்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்குகிறார். இப்படி பல நடிகர்களுக்கு அவர்களுக்கு பிடித்த போக்கில் பயணிக்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தால் அவர் மக்களை அவரின் கல்யாண மண்டபத்தில் சந்திப்பார். அவர் அரசியலுக்கு வராததால் ரசிகர்களை வீட்டில் சந்திக்கிறார். ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். அது ஒரு நல்ல விஷயம்.
நடிகர் வடிவேலு ஒரு நன்றி கெட்டவன். நன்றி என ஏதாவது இருந்து இருந்தால் விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொண்டு இருக்கலாம். அன்று வரவில்லை என்றால் கூட அதற்கு பிறகு ஓரிரு நாட்களுக்கு பிறகு அவரின் நினைவிடத்திற்காவது சென்று இருக்கலாம். இங்கே தான் சாலிகிராமத்தில் இருக்கிறார். அது நன்றி இல்லாததை காட்டுகிறது.
நடிகர் விஷால், சூர்யா எல்லாம் விஜயகாந்த் இறந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களால் வர முடியாததால் அவர்கள் சென்னை திரும்பியதும், விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் அணிவித்து அஞ்சலி செய்தனர். அதை நடிப்பு என பலரும் விமர்சித்தார்கள். அதை அப்படி பார்க்கக்கூடாது. விஷால் நல்லது செய்துவிட்டு அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது குறித்து அறிவிக்கலாம், ஒரு வேளை விஜயுடன் சேர்ந்து கூட அரசியலில் இறங்கலாம். அவரின் விருப்பம் போல அவர் செய்யலாம் என பேசி இருந்தார்.
கே. ராஜன் நடிகர்களை பற்றி முன்வைத்த விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.