(Source: ECI/ABP News/ABP Majha)
“அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு”... ரோகிணி தியேட்டர் விவகாரத்தில் கொதித்தெழுந்த பிரபலங்கள்..!
சென்னை ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள “பத்து தல” படம் நேற்று வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கன்னடப்படமான மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும். பத்து தல படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி இல்லை என்ற நிலையில் காலை 8 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்த ரசிகர்களும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் பிரபலமாக திகழும் ரோகிணி தியேட்டரில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. வழக்கமாக டிக்கெட் பெற்றவர்களை வாசலில் ஊழியர்கள் ஒருவர் சரிபார்த்து உள்ளே அனுப்பி கொண்டிருந்தார். அப்போது நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் தங்கள் குழந்தைகளோடு டிக்கெட் வாங்கிக்கொண்டு படம் பார்க்க வந்துள்ளனர். அவர்களை உள்ளே விட ஊழியர் ஒருவர் மறுத்தார். இதனை அங்கிருந்த ஒருவர் தட்டிக் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
உடனடியாக விளக்கமளித்த ரோகிணி தியேட்டர் நிர்வாகம், படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் சட்டப்படி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை U/A சான்றிதழ் பெற்ற எந்தத் திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் 2, 6, 8 மற்றும் 10 ஆகிய வயதுகளுடைய குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் ஊழியர்கள் இந்த அடிப்படையில் தான் அனுமதி மறுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விஷயத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா,”ரொம்ப தப்பான விஷயம் அது. இப்போ தான் அந்த வீடியோவை பார்த்தேன். நம்பவே முடியல. அவ்வளவு அதிர்ச்சியாக இருக்குது. தீண்டாமை ஒரு பாவச்செயல். அது இந்த காலத்துல தொடருதுன்னு நினைக்கிறப்ப நம்பவே முடியல. என்னதான் அவங்களை படம் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அப்படி நடந்த விஷயம் கண்டனத்திற்குரியது. இதுதொடர்பான சம்பவங்கள் பேசப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும், சமூகத்தின் மனநிலை மாற வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பத்து தல படத்தில் நடித்துள்ள நடிகை பிரியா பவானி ஷங்கர் சம்பந்தப்பட்ட வீடியோவை பதிவிட்டு, “எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, ticket இருக்குல்ல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னனு கேட்ட அந்த குரல் தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடை தான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவரகள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு” என தெரிவித்துள்ளார். முன்னதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் விஜய் சேதுபதி தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.