Kumki 2 Review : யானை செண்டிமெண்ட் கைகொடுத்ததா...? கும்கி 2 திரைப்பட விமர்சனம்
Kumki 2 Review : பிரபு சாலமன் இயக்கத்தில் மதியழகன் , அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து உருவாகியிருக்கும் கும்கி 2 படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கும்கி திரைப்படம் வெளியானது. விக்ரம் பிரபு இப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் கும்கி 2 உருவாகியுள்ளது. மதியழகன் , அர்ஜூன் தாஸ் , ஶ்ரீதா ராவ் , ஹரிஷ் பேரடி சூஸன் ஜார்ஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். நிதி பிரச்சனைகளால் கும்கி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது படத்தின் மீதான தடையை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது கும்கி 2 . கும்கி முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்
கும்கி 2 விமர்சனம்
பள்ளத்தில் சிக்கிய யானைக் குட்டியை நாயகன் மதி காப்பாற்றுகிறார். அதன்பின் மதியை அந்த யானை குட்டி விடாமல் துரத்துகிறது. இருவருக்கும் இடையில் நல்ல உறவு ஏற்பட இருவரும் இணைந்து பயணிக்கின்றனர். குட்டி யானை பெரிய யானையாக மாற நாயகனும் வளர்கிறார். சகோதரர்கள் போல் அவர்கள் இருவருக்குமான உறவு இருக்கிறது. இப்படியான நிலையில் திடீரென்று யானை காணாமல் போகிறது. எங்கு தேடி அலைந்தும் யானை கிடைக்கவில்லை. தனது ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நாயகன் வெளி ஊருக்கு படிக்கச் செல்கிறான். ஐந்து ஆண்டுகள் கழித்து அவன் திரும்பி வரும் போது அவனது யானையைப் பற்றிய தகவல் கிடைக்கவே மறுபடியும் அதை தேடி செல்கிறான். யானை காணாமல் போனதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன ? யானையை நாயகன் மதி கண்டுபிடித்தானா என்பதே கும்கி 2 படத்தின் கதை
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மதி ஒரு கமர்சியல் நடிகருக்கான பக்குவத்தை கொண்டிருக்கிறார். எமோஷனலான் காட்சிகளிலும் சரி கோபம் போன்ற பிற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது அவரது தேர்ந்த நடிப்பு பாராட்டுக்களை பெறுகிறது. நாயகியாக வரும் ஸ்ரிதா ராவ் ஒரு ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸ் , ஹரிஷ் பேரடி போன்ற பிற நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.
நிவாஸ் கே பிரசன்னா படத்தின் உணர்ச்சிகளுக்கு ஏற்ற விதமாக பாடல்கள் அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சுகுமார் தனது கேமரா வழி வியக்கவைக்கும் இயற்கை அழகை காட்டுகிறார்.
2012 ஆம் ஆண்டு கும்கி திரைப்படம் வெளியானபோது அந்த படத்தின் மீது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய வியப்பு இருந்தது. யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு அவர்களை ஈர்த்தது. ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் இயற்கை , யானையை வைத்து பல்வேறு படங்கள் வெளியாகிவிட்டன. இதனால் கும்கி 2 படத்தின் கதை பெரியளவில் அந்த வியப்பை ஏற்படுத்துவதில்லை. அதேபோல் படத்தின் திரைக்கதையும் சொல்ல வரும் உணர்ச்சிகளை போதுமான அளவு கடத்த தவறிவிடுகிறது. யானைக்கும் நாயகன் மதிக்கும் இடையிலான காட்சிகள் பார்க்க நெகிழ்ச்சியை கொடுத்தாலும் இருவருக்கும் இடையிலான பந்தத்தை பார்வையாளர் படம் முழு உணர முடியவில்லை. மையக் கதையில் இருந்து விலகி செல்லும் கிளைக்கதைகள் தேவையற்றவையாக தெரிகின்றன. கும்கி படம் செய்த அந்த மேஜிக்கை கும்கி 2 செய்ய தவறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்




















