Adipurush: ரிலீசுக்கு முன்பே ஃப்ளாப்பா..? ஆதிபுருஷ் படத்திற்கு தமிழில் 24 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை..?
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கு அமெரிக்காவில் நடைபெற்ற டிக்கெட் விற்பனை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கு அமெரிக்காவில் நடைபெற்ற டிக்கெட் விற்பனை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிபுருஷ்:
பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் படுதோல்வி அடைந்ததால் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவரின் அடுத்தப்படமாக ‘ஆதிபுருஷ்’ படம் வெளியாகவுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனாக சன்னி சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா இருவரும் இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஆதிபுருஷ் படம் உருவாகியுள்ளது.
100 கோடி பட்ஜெட்:
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கடந்தாண்டு வெளியான டீசரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லரும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. டீசர் ட்ரோல் செய்யப்பட்டதால் மேலும் ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டு கிராபிக்ஸ் பணிகள் மேம்படுத்தப்பட்டது.
ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பதியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்ற நிலையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இதில் ஹனுமனுக்காக ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடமும், விநியோகதஸ்களிடமும் வேண்டுகோள் விடுத்தார். இது கடும் விமர்சனங்களை சந்தித்தது. இப்படியான நிலையில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி ஆதிபுருஷ் படத்தின் முன்பதிவு இந்திய அளவில் தொடங்கியது. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
24 டிக்கெட்டுகள்:
ரிலீசுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆதிபுருஷ் படத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடர்பான தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மொத்தம் 255 தியேட்டர்களில் 1009 காட்சிகள் திரையிடப்படுகின்றது. இதில் தெலுங்கில் திரையிடப்படும் 552 காட்சிகளுக்கு 6,769 டிக்கெட்டுகளும், இந்தியில் 436 காட்சிகள் திரையிடப்படும் நிலையில் 2,253 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியில் திரையிடப்படும் 21 காட்சிகளுக்கு 24 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.