Radhika Preethi : 'பூவே உனக்காக' ஹீரோயினுக்கு அடித்தது லக்... சசிகுமார் ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை
பூவே உனக்காக சீரியல் மூலம் பூவரசியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்த நடிகை ராதிகா ப்ரீத்திக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
சன் டிவியில் 2020 ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'பூவே உனக்காக'. இந்த சீரியலின் கதாநாயகியாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ராதிகா ப்ரீத்தி. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்தது.
பூவரசியாக பிரபலமான ராதிகா ப்ரீத்தி :
பூவரசி என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்த ராதிகா ப்ரீத்தி சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். சீரியலில் இருந்து விலகினாலும் இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். வித்தியாசமாக போட்டோஸ் போஸ்ட் செய்து ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறார். பூவே உனக்காக சீரியலுக்கு பிறகு வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை.
சினிமாவில் வாய்ப்பு :
ராதிகா ப்ரீத்திக்கு தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார் ராதிகா ப்ரீத்தி. இந்த சந்தோஷமான செய்தியை அறிந்த அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிப்பின் மீது ஆர்வம்:
ராதிகா ப்ரீத்தியின் தந்தை ராணுவத்தை சேர்ந்தவர் என்பதால் சிறுவயதில் இருந்தே படங்கள் பார்த்து இல்லையாம். கல்லூரியில் படிப்பதற்கு முன்னர் இரண்டு படங்களை பார்த்துள்ளார். அதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டு போட்டோ ஷூட் எல்லாம் செய்துள்ளார். அதை பார்த்து தான் அவருக்கு சினிமா சான்ஸ் கிடைத்துள்ளது. கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் சில காரணங்களால் அவர் அந்த வாய்ப்பை ஏற்று கொள்ளவில்லையாம்.
அப்போது அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் பூவே உனக்காக சீரியல் கதாநாயகி வாய்ப்பு. மிகுந்த ஆசை மற்றும் கனவோடு அந்த சீரியலில் நடித்தார் ராதிகா ப்ரீத்தி. அவரின் பல நாள் கனவான சினிமா வாய்ப்பு இப்போது கிடைத்ததால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் ராதிகா ப்ரீத்தி. ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கும் ராதிகா ப்ரீத்தி நிச்சயம் வெள்ளித்திரையில் முத்திரை பதிப்பார் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.