ABP EXCLUSIVE: ‘பொன்னியின் செல்வன்’ சேலை விற்பனைக்கு தடை - காரணம் என்ன..?
அச்சிடப்பட்ட பொன்னியின் செல்வன் 5 சேலைகளை படத்தில் நடித்துள்ள த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகைகளுக்கு பரிசாக வழங்குவதற்கு தயார் எனவும் கூறியுள்ளார்.
சினிமா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி திரையரங்கிற்கு வர உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பல்வேறு நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சோழனின் பெருமை குறித்து மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் புடவைகளுக்கு பெயர்போன இளம்பிள்ளை பகுதியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மையமாக கொண்டு சேலை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் உருவம் பதித்த புடவைகள் விற்கப்பட்டு வந்த நிலையில், சேலையில் சோழனின் பெருமையை கூறும் விதமாக இளம்பிள்ளையைச் சேர்ந்த இளைஞர் முயற்சியில் பொன்னியின் செல்வன் சேலை தயாரிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த இந்த சேலையை பல்வேறு செய்தி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் பகிர்ந்து வந்தனர். இந்த சேலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் லோகோ, திரைப்படத்தில் நடித்துள்ள நடிகைகளான த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உருவம் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. கடுமையான முயற்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த சேலை விற்பனைக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் தயாரிப்பு நிறுவனத்தின் காப்பீட்டு உரிமை இல்லாமல் இந்த சேலைகள் உருவாக்கப்பட்டதால் சேலையை விற்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆன்லைன் சேலை விற்பனையாளர் நாகமணி கூறுகையில், இதுவரை திருமணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட டிசைனர் சேலைகளை திரைப்படத்திற்கும் பயன்படுத்த முடிவு செய்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக பிரதியாக சேலை உருவாக்கப்பட்டது. இதனை பிரபலப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் வசதியோடு பலருக்கு அனுப்பி இருந்தேன். 10 நாட்களுக்கு மேலாக இதற்காக உழைத்து இறுதியாக விற்பனைக்கு தயாரான நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உள்ள புகைப்படங்கள் சேலையில் பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக எங்களிடம் நீங்கள் காப்பீட்டு உரிமை பெற்று தயாரித்திருக்க வேண்டும். ஆனால் அறியாமையால் நீங்கள் உருவாக்கி விட்டீர்கள். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பணிவாக கேட்டுக் கொண்டுள்ளனர். உடனடியாக ஐந்து சேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் சேலை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குக்கு வரும் முன்பு அவர்கள் திரைப்படத்தில் பயன்படுத்திய உடைகள், திரைப்படத்தில் போஸ்டர் அச்சிடப்பட்ட டி ஷர்ட் விற்பனைக்கு வரும். அதை வைத்து பெண்கள், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு செல்லும்போது பொன்னியின் செல்வன் புடவை அணிந்து செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த சேலை உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் வாய்ப்பு கிடைத்தால் அச்சிடப்பட்ட பொன்னியின் செல்வன் 5 சேலைகளை படத்தில் நடித்துள்ள திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகைகளுக்கு பரிசாக வழங்குவதற்கு தயார் எனவும் கூறியுள்ளார்.