Ponniyin Selvan 2 : "குந்தவையா? நந்தினியா? .. ஸ்மார்ட்டாக பதில் சொன்ன சிம்பு.. பாராட்டிய ரசிகர்கள்..!
பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு சொன்ன ஸ்மார்ட்டான பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு சொன்ன ஸ்மார்ட்டான பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் ஏற்கனவே கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலில் சாதனைப் படைத்தது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், ரகுமான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கிடையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று ட்ரெய்லரை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் நடிகர் சிலம்பரசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்களில் சிலம்பரசன் அரங்கினுள் நுழைந்தபோது ரசிகர்கள் எழுப்பிய சத்தம் அடங்கவே பெரும் நேரம் ஆனது. நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, "எல்லோருக்கும் வணக்கம்.நானே பத்து தல நாளைக்கு (இன்று) டென்ஷனா இருக்கேன். என்னுடைய குரு கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லோரும் இங்க இருக்காங்க. அவங்க முன்னாடி பேச பதட்டமாக இருக்கு.
எல்லோருக்கும் தெரியும். பொன்னியின் செல்வன் முதல் பாகம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றது. இப்ப இரண்டாம் பாகம் வெளிவரப் போகுது. நான் கஷ்டமான சூழல்ல இருக்கப்ப எனக்கு செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் மணிரத்னம். நான் அவரை சின்ன குழந்தையாக மட்டுமே பார்க்கிறேன். காரணம் குழந்தைகள் மட்டும் தான் தனக்கு என்ன வேணுமோ அடம்பிடித்து பெறும். அந்த மாதிரி தான் மணி ரத்னம். தனக்கு வேணும் நினைக்கிறது வரும் வரைக்கும் விட மாட்டாரு.
எனக்கு ஷூட்டிங் காலையில போறது கஷ்டமா இருக்கும். நான் ஒரு இரவு பிரியன். இன்னைக்கு நான் சரியான நேரத்துல போறதுக்கு மணிரத்னம் தான் காரணம். இந்த 2ஆம் பாகத்துல ரசிகர்களாகிய உங்களைப் போல விக்ரம் - ஐஸ்வர்யா, கார்த்தி - த்ரிஷா போர்ஷன் பார்க்க ஆர்வமாக இருக்கேன். முடிஞ்சா இன்னும் 2 பார்ட் கூட எடுங்க. நாங்க பார்த்துட்டே இருப்போம்.
ஐஸ்வர்யா ராய்க்கு சொன்ன கதை
சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் போது என்னை ஓவியம் வரைய சொன்னார்கள். எனக்கு என்ன வரைய வேண்டும் என தெரியலை. நான் உங்களை (ஐஸ்வர்யா ராய்) வரைந்தேன். எனக்கு முதல் பரிசு கொடுத்தாங்க. நான் வரைஞ்சதால முதல் பரிசு கிடைக்கல. அதுல நீங்க இருந்ததால தான் கிடைச்சுது என சிம்பு தன் நினைவுகளை சொல்ல அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி எழுந்தது
அப்போது தொகுப்பாளர்கள் சிம்புவிடம், இந்த படத்துல குந்தவையா? நந்தினியா? யாரை உங்களுக்குப் பிடிக்கும் என கேள்வி எழுப்பினர். அதற்கு , “இரண்டு கண்ணுல எது வேணும் என்று கேட்டா என்ன பண்ண முடியும்?” என சிம்பு பதில் கொடுத்தது பலத்த கைத்தட்டலைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பேசும்போது தொடர்ந்து வேலை செய்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் எப்படி அவரால் முடிகிறது என தெரியவில்லை. நேற்று முன்தினம் தான் பத்து தல படம் பார்த்தேன். பிரிச்சி மேஞ்சிட்டாரு. அந்தப்படம் சூப்பரா வந்துருக்கு என சிம்பு தெரிவித்தார்.