Vijay Movie Controversy: விஜயின் அரசியல் - இலவச ப்ரோமோஷன் செய்கிறதா கட்சிகள்? யாருக்கு லாபம்?
Vijay Movie Controversy: லியோ உள்ளிட்ட விஜயின் படங்களுக்கு குவியும் எதிர்ப்புகளே விளம்பரங்களாக மாறுவது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Vijay Movie Controversy: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு, அடுத்தடுத்து பல்வேறு தடைகள் எழுந்து வருகின்றன.
நடிகர் விஜய்:
விஜய், தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகள் திருவிழாக் கோலத்தை ஏற்கின்றன. வசூலில் பல புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன. வசூல் ரீதியில் அடுத்த சூப்பர் ஸ்டார் என கொண்டாப்படுகிறார். அதேநேரம், சினிமாவை தாண்டி தமிழக அரசியலிலும் இவரது பெயர் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுள்ளது. காரணம், தனது ரசிகர் பட்டாளத்தை அரசியல் இயக்கமாக மாற்றி, தீவிர அரசியலில் களமிறங்குவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி வருவது தான். இதன் விளைவாகவே ஒவ்வொரு முறையும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இவரது படங்கள், வெளியீட்டின் போது பல சர்சசைகளையும் தன்னுடனே அழைத்து வருகின்றன. இந்த சர்ச்சைகள் ஆரம்ப காலங்களில் விஜயின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தற்போது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகவே மாறியுள்ளது.
விஜய் படத்திற்கான விளம்பரம்:
பொதுவாக ஒரு படம் வெளியாகிறது என்றால் அதனை மக்களிடையே கொண்டு சென்று சேர்க்க, இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழு செய்தியாளர் சந்திப்பு, தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் என பல்வேறு யுக்திகளை தயாரிப்பு நிறுவனம் கையாளும். ஆனால், விஜயின் படங்களுக்கு கதையே வேறு. பெரும்பாலும் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்று பேசுவார். அதுவே படத்திற்கான விளம்பரத்திற்கு போதுமானதாக இருந்துவிடும். ஆனால், படக்குழு திட்டமிடப்படாத மற்றும் எதிர்பாராத விளம்பரம் என்பதே அதற்கு பிறகு தான் தீவிரமாக நடைபெறும்.
விளம்பரமாகும் சர்ச்சைகள்:
எதிர்பாராத விளம்பரம் என்பதே அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள் தான். ஒவ்வொரு முறை விஜயின் படம் வெளியாகும்போது, ஏதோ ஒரு காரணத்தை கூறி சர்ச்சைகள் வெடிப்பது வழக்கமாகிவிட்டது. அன்று தலைவா படம் தொடங்கி மெர்சல், சர்கார் வரிசையில் தற்போது லியோ படம் வரையிலும் இந்த சர்ச்சைகள் தொடர்கதையாகி வருகின்றன. படத்தை வெளியிடக் கூடாது, கடைசி நேரத்தில் அனுமதிக்கு ரத்து, படத்தின் தலைப்பு, தலைப்பில் உள்ள டேகை நீக்க வேண்டும், கதை திருட்டு, நீதிமன்றத்தில் வழக்கு, தயாரிப்பாளருக்கு எதிராக சர்ச்சை மற்றும் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பல பிரச்னைகள் விஜய் படங்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக தோன்றும். விஜய் அரசியலுக்கு வர தீவிரம் காட்டி வருவதால் தான், தேசிய கட்சிகள் தொடங்கி மாநில காட்சிகள் வரை விஜய்க்கு எதிராக செயல்படுவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
லியோ படத்தையும் விடாத சர்ச்சை:
அக்டோபர் 19ம் தேதி (நாளை) வெளியாக உள்ள லியோ படத்தையும் இந்த சர்ச்சை விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் லியோ படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால், ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு பிரச்னையாக முளைத்தது. கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, அதிகாலை காட்சிகளுக்கு அனுதி கிடையாது, திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து விநியோகஸ்தர்கள் அதிக ஷேர் கேட்டது, சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு படக்குழு நீதிமன்றத்தை நாடியது, ஆந்திராவில் படத்தலைப்பில் காப்புரிமை சிக்கல் என அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இதனால், அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் செய்திதாள்களிலும் லியோ படம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றன. விஜயின் அரசியல் வருகையை தடுக்க ஆளுங்கட்சி, விஜயின் படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது என சமூக வலைதளங்களிலும் கடுமையாக விவாதங்கள் எழுந்துள்ளன. லியோ படத்திற்கு மட்டுமின்றி அண்மையில் வெளியான விஜயின் அனைத்து படங்களுக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது.
யாருக்கு லாபம்?
விஜயின் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பும் இதுபோன்ற பிரச்னைகள் எழுவது, திட்டமிட்டே நிகழ்த்தப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. காரணம், விஜய் படங்களுக்கான ஒரு இலவச விளம்பரமாகவே இந்த சர்ச்சைகள் மாறுகின்றன. பொதுவாக ஒரு படம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட தொலைக்காட்சிகளும், செய்திதாள்களும் சில லட்சங்கள் வரை கட்டணமாக வசூலிக்கும். ஆனால், விஜயின் படங்கள் சர்ச்சைகள் மூலம் செய்தியாக உருவெடுத்து, அனைத்து விதமான ஊடகங்களிலும் சர்வ சாதாரணமாக இடம் பெற்றுவிடுகின்றன. இது ஆரம்பத்தில் எதிர்மறையாக கருதப்பட்டாலும், தற்போது இந்த சர்ச்சைகளே அவரது படங்களுக்கு தீவிர விளம்பரங்களாக மாறியுள்ளன. விஜய் ரசிகர்களும் சர்ச்சை இல்லாமல் தங்களது நடிகரின் எந்தவொரு படமும் இனி வெளியாகாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.