Pine Cone First Look: இரண்டு ஆண்களின் காதல்.. தேசிய விருது வென்ற இயக்குநரின் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..
இயக்குநர் ஓனிர் இயக்கியுள்ள பைன் கோன் ( pine cone) திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது
ஓனிர் இயக்கியிருக்கும் ’ பைன் கோன் ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. விதுர் செதி சாஹிப் வர்மா ஆகியவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இயக்குநர் ஓனிர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கி இருக்கும் ‘பைன் கோன்’ திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். விதுர் செதி சாஹிப் வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம், இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதலை பேசும் படமாக இருக்கும் என்பது இந்தப் படத்தின் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது.
இந்தப் படத்துக்கு அஸ்வினி மலிக் மற்றும் ஓனிர் ஆகிய இருவரும் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். ஓனிர் அனிஷ், சஞ்சய் சூரி, சஞ்சய் ருத்ரே கெவால் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஓனிரின் ஆண்டிக்ளாக் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் சேர்ந்து இந்தப் படத்தை தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய பால்புதுமையினர் திரைப்பட விழாவாக கருதப்படும், வருடந்தோறும் மும்பையில் நடைபெறும் ‘காஷிஷ் சர்வதேச பால்புதுமையினர் திரைப்பட விழா’வில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9: 30 மணியளவில் லிபர்டி சினிமாவில் இந்தப் படம் திரையிடப்படும் என்றும் ஓனிர் தெரிவித்துள்ளார்.
பைன் கோன் திரைப்படம் இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதலை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பால்புதுமையினரைப் பற்றிய புரிதலை சமுதாயத்தில் உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் இயக்குநரான ஓனிர் தன்னை தன்னை ஓருபால் ஈர்பபு கொண்டவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். தொடர்ச்சியாக பால்புதுமையினரின் உரிமைகளுக்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். களத்தில் மட்டும் இல்லாம திரைப்படங்கள் வழியாகவும் பால்புதுமையினரின் வாழ்க்கையை படங்களில் சித்தரித்து வருகிறார்.
இந்தியில் மை பிரதர் நிகில், (my brother Nikhil) பஸ் ஏக் பல்,( bas ek pal ) சாரி பாய், (sorry bhai) செளரங்கா, ( chauranga) சப், (sab) குச் பீகா அல்ஃபாஸ் ( kuch bheega alfaas) , சமா ( sama) மற்றும் ஐ ஆம் ( I am) ஆகியத் திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் ஓனிர். தான் இயக்கிய ’ஐ ஆம்’ என்கிற படத்திற்காக சிறந்த ஹிந்திப் படத்திற்கான தேசிய விருதை வென்றார் ஓனிர்.
காஷிஷ் மும்பை பால்புதுமையினர் திரைப்பட விழா ஜூன் 7-ஆம் தேதி தொடங்கி ஜுன் 11 ஆம் தேதி நிறைவடையும்