Pathu Thala Audio Lauch: அடுக்குமொழி வசனம் பேசிய டி.ஆர்...கைத்தட்டி ரசித்து சிரித்த ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு...களைகட்டிய பத்து தல ஆடியோ லான்ச்!
வழக்கம்போல் அடுக்குமொழி வசனத்துடன் இந்த விழாவில் டி.ராஜேந்தர் பேசத் தொடங்கிய நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது பேச்சைக் கேட்டு மகிழ்ந்து சிரிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குநருமான டி.ஆர். கலந்து கொண்டு கலகலப்பாக பேசியது கவனமீர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்தி மற்றும் படக்குழுவினர் மொத்தமும் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், நடிகர் சிம்பு தன் பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா ராஜேந்தருடன் இன்று வருகை தந்தார்.
காளை பட ஹேர்ஸ்டைலுடன் சிம்பு வருகை தந்த நிலையில் சிம்புவின் புது லுக் அவரது ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இந்நிலையில் முன்னதாக விழாவில் டி.ராஜேந்தர் மேடையேறிப் பேசியது கவனமீர்த்து இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
வழக்கம்போல் அடுக்குமொழி வசனத்துடன் இந்த விழாவில் டி.ராஜேந்தர் பேசத் தொடங்கிய நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது பேச்சைக் கேட்டு மகிழ்ந்து சிரிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
என் மனைவி உயிருள்ள வரை உஷா
”இது மாதிரி அடுக்குமொழி வசனத்தில் என்னால் பொழுது விடியும் வரை பேச முடியும். ஆனால் என் மனைவி உஷா ராஜேந்தர் இந்த விழாவில் பேசக் கூடாது எனக் கூறிவிட்டார். என் உயிருள்ள வரை உஷா அவர்.
நான் கண்டெடுத்த உதயம் என் மகன் சிம்பு. நான் விழாவுக்கு வர மறுத்தேன். வெந்து தணிந்தது காடு பட விழாவுக்கு என் நண்பர் ஐசரி கணேஷ் அழைத்தார். ஆனால் அப்போது நான் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து வந்ததால் வரவில்லை எனக் கூறிவிட்டேன்” என்றார்.
ரஹ்மானுக்கு எதைக் கொடுப்பேன்...
தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், “இந்த விழாவுக்கு நான் வந்ததற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ்நாட்டில் பிறந்து ஆஸ்கர் வரை சென்று மதங்களுக்கு அப்பாற்பட்டு ஆஸ்கர் வரை சென்று விட்டு வந்த ஆருயிர் தோழருக்காக வந்தேன். அவருக்கு ஒரு நினைவுப்பரிசு கொடுக்கப்போவதாகக் கூறினார்கள்.
அவருக்கு எதைக் கொடுப்பார்கள் என்று தெரியாது, என் நினைவையே கொடுப்போமா...அவர் வாழ்க்கையில் கண்ட கனவைக் கொடுப்போமா, இல்லை என் மகனுடன் அவருக்குள்ள உறவைக் கொடுப்போமா.. வந்தேன் ஒரு வீணையைக் கொடுத்தார்கள்...அந்த வீணையைப் பார்த்தேன் வெள்ளி... என் இதயத்தை தர நினைத்தேன் அள்ளி...” என ரஹ்மானைப் புகழ்ந்து டி.ஆர். அடுக்குமொழி வசனத்தில் பேச அதனைப் பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் உற்சாகத்துடன் கைத்தட்டி ரசித்தார்.
மகனால் தான் மீண்டேன்
”என் மனைவி அதிகம் பேசாதீர்கள்; ரஹ்மானுக்கு நினைவுப் பரிசை மட்டும் கொடுத்து விட்டு கீழா வந்துவிடுங்கள் எனக் கூறினார். மனைவி சொல்லே மந்திரம், ஆனால் அதையும் மீறி பேசுவது என் தந்திரம்.
மேடை ஏறக்கூடாது. மேடை ஏறினால் ரசிகனை திருப்தி படுத்தாமல் அப்பா நீங்கள் இறங்கக்கூடாது. நீங்கள் கலைஞனாக இருந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தந்தையின் புகழ் இறங்கக்கூடாது என என் மகன் உரம் ஊட்டியதால் தான் நான் அமெரிக்கா சென்று இன்று இங்கே வந்து நிற்கிறேன். அவருக்காக வராமல் இங்கே யாருக்காக வருவேன்” எனப் பேசினார்.
டி.ராஜேந்தர் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.