வெறும் 50 லட்சம்..அலட்சியம் காட்டிய லைகா..ஆப்பு வைத்த ஹாலிவுட் நிறுவனம்
அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில் தற்போது முதன்மையான காரணம் தெரியவந்துள்ளது
விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருந்தது. பின் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரோடக்ஷன்ஸ் தெரிவித்தது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். விடாமுயற்சி படத்தில் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு லைகா ப்ரோடக்ஷன்ஸின் அலட்சியப் போக்கே காரணம் என பலர் தெரிவித்து வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனத்திற்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் , படத்தின் வேலைகள் முடிவடையாமல் இருப்பது என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமான காரணம் ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.
50 லட்சம் கேட்ட ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம்
ஹாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் விடாமுயற்சி. விடாமுயற்சி டீசர் வெளியானபோது இப்படத்தின் காட்சிகள் பிரேக்டவுன் படத்தின் காட்சிகளைப் போல் இருப்பதை பலர் குறிப்பிட்டார்கள். மேலும் பிரேக்டவுன் படத்தை தயாரித்த பாரமெளண்ட் பிக்ச்சர்ஸ் விடாமுயற்சி படக்குழுவிடம் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் பாரமெளண்ட் பிக்க்சர்ஸிடம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வாங்கியப் பின்பே இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது இது தொடர்பாக புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் சினிமா விமர்சகரான சித்ரா லட்சுமணன். அதாவது பாரமெளன் பிக்க்சர்ஸிடம் விடாமுயற்சி படக்குழு முறையாக அனுமதி வாங்கியதாகவும் பாரமெளண்ட் பிக்ச்சர்ஸ் 50 லட்சம் உரிமத் தொகையாக கேட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளது லைகா நிறுவனம். இதற்கிடையில் விடாமுயற்சி முழு படப்பிடிப்பும் முடிவடைந்து படத்தைப் பார்த்த பலர் படம் முழுக்க முழுக்க பிரேக்டவுன் படம் போலவே இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதனால் கடுப்பான ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் விடாமுயற்சி படத்தை முழுவதும் பார்த்து நாங்கள் அனுமதி அளித்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது. அதற்கேற்றபடி மும்பையில் உள்ள குழு ஒன்று விடாமுயற்சி படத்தை பார்த்து அறிக்கையை பாரமெளண்ட் பிக்ச்சர்ஸூக்கு அனுப்பியுள்ளது. ஆனால் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் என்பதால் இந்த அறிக்கையை யாரும் இன்னும் படித்து பார்க்கவில்லை. இதனால் தான் விடாமுயற்சி படத்தை சொன்ன தேதிக்கு வெளியிட முடியவில்லை என சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்