Actress Oviya : நான் சினிமாவுக்கு ஏற்ற ஆள் இல்லை... சான்ஸ் தேடி ஓட மாட்டேன்... ஓவியா ஓபன் டாக்..!
நட்சத்திர அஸ்தஸ்து என்ன என்பதை நான் பிக்பாஸ் டைமிலேயே அனுபவித்து விட்டேன். அந்த சமயத்தில் எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. அது பெரிய அளவுக்கு என்னை பிரமிக்க வைக்கவில்லை என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஓவியா. அதிலும் குறிப்பாக அவர் பிரபலமடைய மிகப்பெரிய காரணமாக இருந்த ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். ஏற்கனவே களவாணி, கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான ஒரு முகமாக இருந்த ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த பிறகு அவர் பிரபலத்தின் உச்சிக்கு சென்றார்.
அவருக்கு என தனி ரசிகர் பட்டாளம், ஆர்மி என்றெல்லாம் துவங்கி ஓவியாவை கொண்டாடினார்கள். அதற்கு பிறகு ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய அளவில் அவரால் ரீச்சாக முடியவில்லை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா மிகவும் வெளிப்படையாக சினிமாவில் தன்னுடைய நோக்கம் என்ன விருப்பம் என்ன என்பதை பற்றி மனம் திறந்து பேசியிருந்தார். "சினிமாவில் நான் வெற்றிகளை பெற்ற நடிகையாக வேண்டும், நம்பர் 1 நடிகையாக வேண்டும், பெரிய படங்கள் பண்ண வேண்டும், பெரிய ஸ்டாராக வேண்டும் என்பதெல்லாம் எனது விருப்பமில்லை. ஏற்கனவே மக்களுக்கு என்னை நன்றாக தெரியும். அதற்கு நான் ஆசைப்படவும் இல்லை. நட்சத்திர அஸ்தஸ்து என்றால் என்ன என்பதை நான் பிக்பாஸ் டைமிலேயே அனுபவித்து விட்டேன். அந்த சமயத்தில் எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. அது பெரிய அளவுக்கு என்னை எக்ஸைட் செய்யவில்லை.
நான் நடிக்கும் படங்களை 100% என்னுடைய சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்படுகிறேன். நான் யாரிடமும் போய் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கும் ஆளில்லை. இதுவரையில் கேட்டதும் இல்லை. சினிமாவுக்கு நான் கொஞ்சம் ஆப்ட்டான ஆள் இல்லை தான். நெட்வொர்க்கிங் செய்யும் பழக்கம் கூட கிடையாது. ஆனால் டைரக்டர் அல்லது புரொடியூசர் யாராவது என்னை தேடி வந்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அதில் நிச்சயம் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்து நடிப்பேன்.
இதுவரையில் நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்னுடைய முதல் படம் களவாணி தான். அதற்கு பிறகு எனக்கு பிடித்த மாதிரி வேறு எந்த கேரக்டரும் அமையவில்லை. எல்லா படமும் வெற்றி பெறும் என சொல்ல முடியாது. அது ஒரு நடிகையாக நமது கையிலும் இல்லை. என்னுடைய சிறந்ததை நான் கொடுக்க முடியும் மற்றது என்னுடைய கையில் இல்லை. என்னுடைய படங்களை தேர்வு செய்வது, முடிவு எடுப்பது அனைத்துமே நான் தான். அது சக்சஸ் ஆனாலும் சரி பிளாப் ஆனாலும் சரி அது என்னுடைய முடிவால் தான் இருக்கும். நான் யாரையும் கேட்டு முடிவு எடுப்பதில்லை" என மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார் நடிகை ஓவியா.