Oscar Nominations 2023: ஆஸ்கார் விருது இறுதிப்பட்டியலில் நுழைந்தது 'நாட்டு நாட்டு' பாடல்.. ரசகிர்கள் கொண்டாட்டம்..!
சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று அசத்தியுள்ளது.
திரைப்பட கலைஞர்களின் வாழ்நாளில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுவது ஆஸ்கார் விருது. நடப்பாண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் இந்தியாவில் இருந்து மாபெரும் வெற்றிப்படமான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் போட்டியில் இருந்து கொண்டே வந்தது. இந்த நிலையில், ஆஸ்கார் விருதுகளை பெறுவதற்கான சிறந்த பாடல் என்ற பிரிவில் இறுதிப்பட்டியலில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. இதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆர்.ஆர்.ஆர்.
இந்திய திரையுலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமெளலி. இவர் இயக்கிய பாகுபலி படம் உலகளவில் இவரை திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய ஆர்.ஆர். ஆர். படம் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது.
இந்திய சுதந்திர காலகட்டத்தில் நடைபெறுவது போல உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடித்தனர். இந்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நாட்டு நாட்டு என்ற பாடல் ஆடியிருப்பார்கள். இந்த பாடல் திரையரங்கில் பார்த்த ரசிகர்களுக்கே விருந்தாக அமைந்தது.
சிறந்த ஒரிஜினல் பாடல்
சிறந்த நடன அசைவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாடல், புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் பல கட்ட போட்டிகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கான பரிந்துரையில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள 95வது ஆஸ்கார் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுகளுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெறும் பாடல்கள் பெயர்கள் இன்று பரிந்துரைக்கப்பட்டது.
ஆஸ்கார் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த இறுதிப்பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமான வெளியான இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 95வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர பட்டாளங்கள்
ஏற்கனவே நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, ஆர்.ஆர்.ஆர். படத்தில் ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருடன் அலியாபட், சமுத்திரக்கனி, அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெளிநாட்டு கலைஞர்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Actor Balakrishna : தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களை தரம் தாழ்ந்து கேலி செய்த பாலகிருஷ்ணா... பொங்கி எழுந்த நாகார்ஜுனா குடும்பம்..
மேலும் படிக்க: Vikraman First Video : பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் முதல் வீடியோ.... அறம் வெல்லும் என மீண்டும் அழுத்தமாக சொன்ன விக்ரமன்..