Vairamuthu : வைரமுத்துவுக்கு இலக்கிய விருது; மறுபரிசீலனை செய்ய ஓ.என்.வி., அகாடமி முடிவு!
பாலியல் சர்சை எழுந்ததால் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்ய ஒ.என்.வி கலாச்சார அகாடமி முடிவு செய்துள்ளது.
மலையாள இலக்கிய உலகின் தேசிய விருதாகக் கருதப்படும் ஓ.என்.வி குறுப்பு இலக்கிய விருது 2020ம் ஆண்டுக்காக தமிழ் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சீரிய மலையாள இலக்கியவாதியான குறுப்பின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது இதுவரை சுகதகுமார், எம்.டி.வாசுதேவன், நாயர், அக்கிதம் அச்சுதன், நம்பூதிரி, லீலாவதி என மலையாள இலக்கியவாதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் முதன்முதலாக மலையாள மொழியல்லாத ஒரு இலக்கியவாதியாக வைரமுத்துவுக்குத் தருவதாக அறிவிக்கப்பட்டது. 3 லட்ச ரூபாய் பணமுடிப்புடன் கூடிய இந்த விருதை வைரமுத்து பெறுவதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் வாழ்த்தினார். இதுகுறித்தத் தனது பதிவில்,’தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை கவிப்பேரரசு பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார். தமிழுக்கு பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார்.
அவருடைய பெயர் கொண்ட பெருமையான விருதை ஒரு பாலியல் குற்றசாட்டு சுமத்தப்படும் நபருக்கு வழங்குவது மிகுந்த அவமானகரமானது
ஆனால் #metoo விவகாரத்தில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் வைரமுத்துவுக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.என்.வி விருதை அவருக்கு வழங்குவதில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. வைரமுத்து மீதான ‘மீ-டு’ புகாரில் இன்னும் எவ்வித தீர்வுமே கிடைக்காத நிலையில் அவரை இந்த விருதுக்குப் பரிந்துரைப்பது விருதை அவமதிப்பதாகும் என திரைப்பட நடிகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். மலையாள நடிகரான பார்வதி திருவொத்,’ஓ.என்.வி சார் எங்களின் பெருமை. கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரின் பங்களிப்பு ஈடு செய்யமுடியாதது. நமது கலாச்சாரம், நமது மனம் மற்றும் இதயம் அனைத்துமே அவரால் நிரம்பி இருக்கிறது.அதனால் தான் சொல்கிறேன், அவருடைய பெயர் கொண்ட பெருமையான விருதை ஒரு பாலியல் குற்றசாட்டு சுமத்தப்படும் நபருக்கு வழங்குவது மிகுந்த அவமானகரமானது’எனப் பதிவிட்டிருந்தார்.
இவரால் பாதிக்கப்பட்டதாக 2018ல் வெளிப்படையாகப் புகார் அளித்த பாடகர் சின்மயி, ‘ இவரை மேடை ஏற்றி மகுடம் சூட்டி, பெரிய்ய யோகியர் மாதிரி scene போடறதெல்லாம் ஒரு பாலியல் குற்றவாளிய encourage பண்ணுற மாதிரி தான்.’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படியான தொடர் எதிர்ப்புகளை அடுத்து அவருக்குத் தரவிருந்த ஓ.என்.வி விருதை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஓ.என்.வி. ஆர்ட் மற்றும் கல்ச்சுரல் அகாடெமி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த அந்த நிர்வாகத்தின் அறிக்கையில், ‘விருதுகள் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த ஆண்டு ஓ.என்.வி இலக்கிய விருதை மறுபரிசீலனை செய்ய ஒ.என்.வி கலாச்சார அகாடமி முடிவு செய்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாளத் திரைப்பட இயக்குநரும் அகாடமியின் தலைவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
Also Read: "அவர் ஒரு பாடலாசிரியர்தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க?" - சின்மயி ட்வீட்
’