Pongal Movies: இதே நாளில் ரிலீசான 6 பொங்கல் படங்களின் நிலை என்ன தெரியுமா? - வாங்க பார்க்கலாம்
Pongal Movies: தமிழ் சினிமாவில் ஜனவரி 10 ஆம் தேதி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பொங்கல் பண்டிகைக்காக வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி காணலாம்
Pongal Movies: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஜனவரி மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம் புத்தாண்டு,பொங்கல் தொடர் விடுமுறை, குடியரசு தினம் என அடுத்தடுத்து லீவு நாட்கள் வருவதால் முன்னணி நடிகர்கள் படங்களும் ஜனவரி மாதத்தை குறிவைப்பது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 10 ஆம் தேதி இதுவரை பொங்கல் ரிலீசாக வெளியான படங்களின் நிலை என்ன என்பதை காணலாம்.
மிஸ்டர் பாரத்
1986 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நடித்த படம் “மிஸ்டர் பாரத்”. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இது அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் நடிப்பில் 1978 ஆம் ஆண்டில் வெளியான திரிசூல் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தில் ரஜினிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார் என்றாலும் இருவரது இமேஜூக்கும் ஏற்ற வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
தூள்
2003 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விக்ரம் 2வது முறையாக நடித்த படம் “தூள்”. இந்த படத்தில் ஜோதிகா, ரீமாசென், விவேக், சாயாஜி ஷிண்டே, சகுந்தலா, பசுபதி, பறவை முனியம்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த தூள் படம் ஒரு பக்கா ஆக்ஷன் படமாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது. விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இப்படத்தில் தான் முதல்முறையாக கிளைமேக்ஸ் காட்சியில் பாடல் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புறப் பாடகர் பரவை முனியம்மா பாடிய சிங்கம்போல நடந்து வரான் பாடல் பட்டிதொட்டி எங்கும் செம ஹிட்.
ஜில்லா
2014 ஆம் ஆண்டு ஆர்.டி.நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, பூர்ணிமா பாக்யராஜ், மஹத், நிவேதா தாமஸ் என பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜில்லா’. இமான் இசையமைத்த இப்படம் படத்தின் அதீத நீளம் சுமாரான வெற்றியையே பெற்றது. இருந்தாலும் ஜில்லா படத்தின் பாடல்கள் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் ஆக அமைந்தது.
வீரம்
அதே 2014 ஆம் ஆண்டு இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித்குமார் முதல்முறையாக இணைந்த படம் “வீரம்”. கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதின. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த வீரம் படத்தில் தமன்னா, பாலா, சந்தானம், நாசர், அபிநயா என பலரும் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை கொண்ட இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
பேட்ட
2019 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூடன் ரஜினி கூட்டணி அமைத்த படம் தான் “பேட்ட”. இந்த படத்தில் த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த பேட்ட படம் ஒரு ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஸ்வாசம்
அதே 2019ல் சிறுத்தை சிவாவுடன் அஜித் 4வது முறையாக இணைந்த “விஸ்வாசம்” படம் பொங்கல் வெளியீடாக ரிலீசானது. இப்படத்தில் நயன்தாரா, அனிகா சுரேந்தர், ஜெகபதி பாபு, விவேக், கோவை சரளா, ரோபா ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்த இப்படம் அஜித்துக்கு மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் தேசிய விருது பெற்றிருந்தார்.