Video : உலகத்திலேயே இதுவரை யாருமே செய்யல.. பார்த்திபனை புகழ்ந்த ரஜினி.. வைரலாகும் ப்ரோமோ..
அந்தந்த மொழி சினிமாவின் உச்சநட்சத்திரங்கள் படத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வீடியோ ஒன்றை இணைத்து ஒரு ப்ரோமோ வெளியாகி வைரலாகி உள்ளது.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன், தனது வித்தியாசமான கலை படைப்புகளின் மூலம் தனது திறமையை உலகிற்கு நிரூபிப்பவர். இவர் இயக்குனர் மட்டுமின்றி மக்கள் ரசிக்கும் நடிகரும் கூட. பெரும்பாலும் அவர் இயக்கும் படங்களில் அவரே முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார். கடைசியாக அவர் ஒரே ஒரு தனி ஆளாக நடித்து ஒத்த செருப்பு என்னும் திரைப்படம் வெளிவந்து இருந்தது. அந்த திரைப்படம் வசூல் அளவிலும், விமரசகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி உலகெங்கும் பல விருதுகளை குவித்தது. ஆஸ்கார் நாமினேஷன் லிஸ்டில் வந்து அசத்திய அந்த படத்தை தொடர்ந்து இரவின் நிழல் என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார் பார்த்திபன்.
இரவின் நிழல்
இந்த படம் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக உள்ளது, இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, பார்த்திபன், ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ப்ரோமோஷன்
படத்தில் புரொமோஷனுக்காக இதில் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் பெயர்களை வெளியிடுவது,இந்தப் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. அதுபோக ஓயாமல் எல்லா சேனல்களுக்கும் பேட்டி தந்து கொண்டிருக்கும் பார்த்திபன் மூலம் படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
ஒரே ஷாட்
இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் பல ஆடை, ஒப்பனை மாற்றங்களுடன் 50 வருடம் பயணிக்கும் ஒரு மனிதனின் கதையாக இந்த படம் உருவாகி வந்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
நிறைய மொழிகளில் வெளியீடு
மிகப்பெரிய உழைப்பின் மத்தியில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை நிறைய மொழிகளில் வெளியிடுகிறார்கள். அதனால் அந்தந்த மொழி சினிமாவின் உச்சநட்சத்திரங்கள் படத்திற்கு ஆதரவு தந்து கொண்டிருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் விடியோ ஒன்றை இணைத்து ஒரு ப்ரோமோ வெளியாகி வைரலாகி உள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
அந்த ப்ரோமோவில் ரஜினி படத்தை குறித்து பேசுகிறார். அவர் பேசுகையில், "இயக்குநர் பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு திரைப்படத்தில் பெரிய சாதனை படைத்து தேசிய விருது பெற்றிருந்தார். எப்போதும் வித்தியாசமான புதிய முயற்சிகளை செய்யும் கலைஞனான பார்த்திபன் உலக அளவில் யாரும் செய்யாத நான் லீனியர் திரைக்கதை கொண்ட படத்தை சிங்கிள் ஷாட்டில் இயக்கியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அதோடு இந்த படத்தை எப்படி எடுத்தார்கள் என்ற மேக்கிங்கை 29 நிமிடத்திற்கு காண்பிக்கிறார்கள். அது மிகவும் ப்ரம்மிக்க வைக்கிறது." என்று பேசி இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்