இப்படியொரு படம் பாத்துருக்கவே மாட்டீங்க! 6888 படம் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் கறுப்பின பெண்கள் ராணுவப் படையான 6888 பட்டாலியன் அவமானங்களை கடந்து படைத்த சாதனையப் பேசியுள்ளது 6888 படம்.
உலகில் அதிகளவு அடிமைத்தனத்தை எதிர்கொண்ட பாலினமாக இருப்பவர்கள் பெண்கள். உலகிலேயே அடிப்படை உரிமைகள் பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இனம் கறுப்பினம். உலகில் அதிகளவு வாழும் கறுப்பின மக்கள் இன்று அதிகாரம், ஆட்சி என பலவற்றில் இருந்தாலும் இன்றளவும் பல இடங்களில் தங்களது நிறத்தால் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது மறுக்க இயலாது.
6888 படம்:
அப்படி என்றால், உலகப்போர் காலகட்டத்தில் கறுப்பின பெண்கள் எந்தளவு துயரங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்தே பார்க்க முடியாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் நடக்கும் வெள்ளை இன அதிகாரிகளின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய கறுப்பின பெண்கள் ராணுவ பிரிவின் வலியை மிகவும் ஆழமாக பேசிய படமாக நெட்ப்ளிக்சில் ரிலீசாகியுள்ளது 6888 படம்.
பொதுவாக போர் முனைப்படங்கள் என்றாலே ரத்தம், துப்பாக்கிச் சத்தம், மரணங்கள், மரண ஓலங்கள் என்றே நம் கண் முன் வந்து நிற்கும். துப்பாக்கி குண்டுகள், ரத்தங்கள் ஏதும் இல்லாமல் உலகையேப் புரட்டிப்போட்ட உலகப்போர் காலகட்டத்தை உணர்வுப்பூர்வமாக பெண்கள் தங்கள் உரிமைக்காக போராடும் படமாக இந்த படத்தை எடு்த்துள்ளனர்.
கடிதப் போக்குவரத்து:
1940 போன்ற காலகட்டத்தில் மக்களின் ஒரே ஒரு தொலைத்தொடர்பு சாதனம் கடிதம் மட்டுமே ஆகும். அதுவும் குறிப்பாக, தாய், தந்தை, மனைவி, குழந்தை, நண்பர்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு போர் முனையில் போராடும் வீரர்களுக்கும், போர் எல்லையில் உயிருடன் தினம் தினம் போராடும் தனது கணவன், மகன், தந்தை, சகோதரர்களை விட்டு பரிதவிக்கும் குடும்பத்திற்கு ஒரே ஒரு இணைப்பு பாலம் கடிதம் மட்டுமே.
வீரர்கள் பற்றாக்குறை, ஹிட்லரின் நாஜிப்படை தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்களால் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரை எதிர்த்துப் போராடும் அமெரிக்காவின் வீரர்கள் தங்களது குடும்பத்திற்கு அனுப்பிய கடிதமும், அவர்களது குடும்பம் வீரர்களுக்கு எழுதிய கடிதங்களும் லட்சக்கணக்கில் தேங்கி நிற்கிறது.
கறுப்பின பெண்கள் ராணுவப் படை:
மறுமுனையில் அமெரிக்காவின் வெள்ளை ஆதிக்கத்தின் மத்தியில் ராணுவத்தில் கறுப்பின பெண்கள் படை தீவிரப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை போரின் முனைக்கு அனுப்பாமல் பயிற்சியிலே மூத்த அதிகாரிகள் பயிற்சிக் கூடாரத்திலே வைத்துள்ளனர். பயிற்சி மையத்தில் அவர்கள் செய்யும் சிறு தவறுகளையும் புகைப்படம் எடுத்து, ராணுவத்தில் கறுப்பின பெண்கள் பணியாற்றுவதே பயனற்றது என்று செய்தி வெளியிடுவதற்காக ஒரு கூட்டதை வெள்ளை அதிகாரிகள் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில், கடிதப் போக்குவரத்து இல்லாமல் வீரர்கள் தங்களது குடும்பங்களைப் பற்றியும், தங்களது குடும்பங்கள் பற்றியும் மனதளவில் சோர்வடைகின்றனர். லட்சக்கணக்கில் தேங்கியுள்ள கடிதங்களை எப்படிச் சேர்ப்பது என்று அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டிடம் மேற்கொள்ளும் ஆலோசனையின்போது அந்த பணியை கறுப்பின பெண்கள் ராணுவப் படையான 6888 பட்டாலியனிடம் வழங்க முடிவு மேற்கொள்ளப்படுகிறது.
ராணுவ உயர் அதிகாரிகள் இந்த பணியை அவர்களிடம் வழங்க முழு மனது இல்லாமல் தயங்க, அமெரிக்க அதிபர் உத்தரவால் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த சூழலில் கறுப்பின பெண்கள் ராணுவ படையிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது. பயிற்சி மையத்திலே இருந்த பெண்களும், அவர்களது அதிகாரியும் சண்டைக்காகவே தாங்கள் அனுப்பபடுகிறோம் என்று கருதுகின்றனர்.
அவமானமும், அங்கீகாரமும்:
ஆனால், பின்னரே அவர்கள் வீரர்களின் கடிதங்களை அவர்களது குடும்பத்தினரிடம், குடும்பங்களின் கடிதங்கள் வீரர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிக்காகவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து வேதனை அடைகின்றனர். ஆனால், ராணுவ கிடங்கில் லட்சக்கணக்கில் குவிந்து கிடக்கும் கடிதங்களைப் பார்த்த பிறகே இந்த பணியின் தீவிரத்தை உணர்கின்றனர்.
முழுமையாக முகவரி இல்லாத கடிதங்கள், ஒரே பெயரிலான ஆயிரக்கணக்கான கடிதங்கள், வீரர்கள் அளித்த கடினமான லோகேஷன் ட்ராக்கர்கள், எலிகள் கடித்த கரையான்கள் அரித்த கடிதங்கள் என பல சவால்களைச் சமாளித்தும், வெள்ளை அதிகாரிகள் தொடர்ந்து தரும் இன்னல்களையும் அவர்களால் எதிர்கொள்ளும் அவமானங்களையும் எதிர்கொண்டு எவ்வாறு கடிதங்களை அனுப்புகின்றனர் என்பதே படத்தின் பிற்பாதி கதைக்களம் ஆகும்.
இரண்டாம் உலகப்போரில் நடந்த உண்மைச் சம்பவத்தை அப்படியே கதைக்களாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். 1945ம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பயிற்சி பெற்ற கறுப்பின பெண்கள் ராணுவ படைப்பிரிவான 6888 பட்டாலியன் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிற்குச் சென்று ஜெர்மன் படைகளின் சவாலை எதிர்கொண்டு இந்த சவாலான பணியை மேற்கொண்டனர்.
24 மணிநேரமும் பணியாற்றி 64 ஆயிரம் கடிதத்தை 3 மாதத்தில் அனுப்பினர். வீரர்களின் உடைமைகள் உள்பட லட்சக்கணக்கான பொருட்கள் பரிமாற்றப்பட்டது. கெர்ரி வாஷிங்டன், எபானி ஓப்ஸ்டியன், டீன் நோர்ரீஸ், சாம் வாட்டர்சன், ஓப்ரா வின்ஃப்ரே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை டைலர் பெர்ரி இயக்கியுள்ளார். இந்த படம் ஃநெட்ப்ளிக்சில் தமிழிலும் உள்ளது. கட்டாயம் பார்க்கவும்.