Vignesh Shivan Nayanthara : வயநாடு நிலச்சரிவு.. நிவாரண நிதியாக ரூ.20 லட்சம் அளித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்
Vicky Nayanthara : நயன்தாராவும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேரள அரசுக்கு 20 லட்ச ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் தென்னிந்திய மாநிலமான கேரளா, பலருக்கும் பிடித்த சுற்றுலா தளமாக இருக்கிறது. அந்த ஊரின் சினிமாவை தாண்டி அங்குள்ள இடங்களுக்கும் மக்களும் பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், வயநாடு மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது.
தென்மேற்கு பருவ காலம் தொடங்கிய நிலையில், மழை வெளுத்து வாங்கியது. இதனால் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரும் அளவில் பாதித்துள்ளது. 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் பல மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மும்மரமாக நடந்து வர, சினிமா பிரபலங்கள் பலர் கேரள அரசுக்கு நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.
நயன் - விக்கி பங்களிப்பு :
கோலிவுட்டின் க்யூட் ஜோடியாக வலம் வரும் நயன்தாராவும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேரள அரசுக்கு 20 லட்ச ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். அத்துடன் இருவரும் சேர்ந்து, ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “ வயநாட்டில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை பார்த்தால் மனம் வேதனைக்கு உள்ளாகுகிறது. இந்த இழப்பு பதைபதைக்க வைக்கிறது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருத்தருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும். மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் எங்களால் முடிந்த இந்த 20 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம்.
இக்கட்டான இந்த வேளையில் ஓயாமல் முன் நின்று பணிபுரியும் அரசாங்கம், மீட்பு குழவினர், தன்னார்வலர்களை நினைத்தால் மனம் நெகிழ்ச்சி அடைகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவி செய்த மற்ற பிரபலங்கள் :
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் ஃபஹத் ஃபாசிலும் அவரது மனைவி மற்றும் நடிகையுமான நஸ்ரியாவும் இணைந்து கேரள அரசுக்கு 25 லட்ச ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.
மலையாள நடிகர் மம்மூட்டி 20 லட்ச ரூபாயும், அவரது மகன் மற்றும் நடிகருமான துல்கர் சல்மான் 15 லட்ச ரூபாயையும் வழங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் சூர்யாவும் அவரது மனைவி மற்றும் நடிகையுமான ஜோதிகாவும் 50 லட்ச ரூபாயை வழங்கினர். நடிகர் விக்ரம் 20 லட்ச ரூபாயை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.