6 years of Nadigaiyar Thilagam : சாவித்திரியாக மறுபிறப்பெடுத்த கீர்த்தி சுரேஷ்.. நடிகையர் திலகம் படம் வெளியான நாள்!
நடிகர் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக வாழ்ந்த 'நடிகையர் திலகம்' திரைப்படம் வெளியான நாள் இன்று.
சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படங்கள் எத்தனை எத்தனையோ வெளிவந்து இருந்தாலும் அதில் பெண் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்ட எண்ணிக்கை என்பது குறைவாகவே இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஒருவரான ஆளுமை நிறைந்த நடிகை சாவித்திரியின் பயோபிக் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. தெலுங்கில் 'மகாநடி' என்ற பெயரிலும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் 2018ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், மதுரவாணியாக சமந்தா, ஆண்டனியாக விஜய் தேவரகொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஜேந்திர பிரசாத், பானுப்ரியா, ஷாலினி பாண்டே, மாளவிகா நாயர், பிரகாஷ்ராஜ், நாக சைதன்யா உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் வெகு சிறப்பாக கன கச்சிதமாக பொருந்தி இருந்தது.
சாவித்திரி கதாபாத்திரம் தான் முதன்மையானது என்பதால் அதை ஏற்று நடிக்க போகும் நடிகை யார் என்பது மிக முக்கியமானது. அதற்கு தேர்வு செய்யப்பட்ட கீர்த்தி சுரேஷ் கனகச்சிதமான பொருத்தம். தனக்கு கொடுத்த அந்த வாய்ப்பை எந்த இடத்திலும் சரிய விடாமல் அப்படியே சாவித்திரியின் மேனரிசம், சாயல், பாணி என அனைத்தையும் பல கோணங்களிலும் நகல் எடுத்தது போல அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை சிலிர்க்க வைத்திருந்தார்.
சாவித்திரியின் வெகுளித்தனம், உதவும் குணம், வெட்கப்படுவது, மதுவுக்கு அடிமையவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஸ்கோர் செய்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். அவர் இதுவரையில் நடித்த படங்கள் அனைத்தையும் ஓவர்டேக் செய்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சமந்தா - விஜய் தேவரகொண்டா கேரக்டருக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. நடிகர் துல்கர் சல்மானும் ஜெமினி கணேசனாகவே வாழ்ந்து இருந்தார். ‘பிளாக் அன் ஒயிட்’ காலகட்டத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர். தோட்டா தரணி, அவிநாஸ் கொள்ளா இருவரின் கலை இயக்கமும், மதன் கார்க்கியின் அழகான வசனங்களும் படத்தை தூக்கி நிறுத்தியது. ஆவணப்படத்தின் சாயலும் அளவுக்கு அதிகமான கற்பனை காட்சிகளும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக படைக்கப்பட்ட இப்படத்தில் எந்த வித செயற்கைத்தனத்தின் கலப்படமும் இல்லாதது ரசிக்க வைத்து.
ஒரிஜினிலாக தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்யப்பட்ட படம் என்பதால் லிப் சிங் இல்லாமல் ஒரு சில இடங்களில் தெலுங்கு படம் பார்த்த ஃபீல் கொடுக்கும். இருப்பினும் தமிழ் சினிமா காலத்துக்கும் அள்ளி அணைத்து கொள்ள வேண்டிய பொக்கிஷமான திரைப்படம் 'நடிகையர் திலகம்'.