HBD Vignesh Shivan : போடா போடி படத்தில் தொடங்கிய பயணம்.. இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள்
இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள்
இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விகனேஷ் சிவன். சிலம்பரசன் வரலட்சுமி சரத்குமார் நடித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடன்ர்து தனது அடுத்தப் படத்தை இயக்குவதற்கான இடைவெளியில் திரைப்படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார் விக்னேஷ்.
அனிருத் இசையமைத்த சான்ஸே இல்ல, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு அதாரு பாடல், மாரி படத்தில் தப்பாதான் தெரியும் முதலிய இவர் எழுதிய பாடல்கள் தனி ரூட்டில் சென்றன. பின் 2015-ஆம் வருடம் நானும் ரெளடிதான் படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி நயன்தாரா நடித்து வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதே நேரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் விக்கி மற்றும் நயன்தாரா இடையில் காதலும் மலர்ந்தது. நானும் ரெளடிதான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.
போடா போடி படம் போலவே இந்தப் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தனது ஒவ்வொரு படத்திற்கான இடைவெளிக் காலத்தில் பாடல்களை எழுதுவதன் மூலம் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார் விக்னேஷ் ஷிவன். ரெமோ, யாக்கை, விக்ரம் வேதா, கோலமாவு கோகிலா, என்.ஜி.கே, நம்ம வீட்டு பிள்ளை என பல முக்கியமானப் படங்களுக்கு வரிகள் எழுதினார். 2020-ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட பாவக் கதைகள் தொடரில் ஒரு பகுதியை இயக்கினார். இதனைத் தொடர்ந்து 2021-ஆம் வருடம் நடிகை நயன்தாராவுடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஜூன் 2022-ஆம் வருடம் இருவருக்கும் திருமணமும் செய்துகொனண்டனர்.
இயக்குநர் பாடலாசிரியராக மட்டுமில்லாமல் தனது மனைவியுடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். தங்களது முதல் தயாரிப்பாக கூழாங்கல் என்கிற சுயாதீனப் படத்தைத் தயாரித்தது. இந்தப் படம் சர்வதேச மேடைகளில் அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல், ராக்கி உள்ளிட்டப் படங்களைத் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.