Mysskin: ஒரு நாளைக்கு 120 சிகரெட் அடிப்பேன்.. தம் அடிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.. இயக்குநர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு
நாள் ஒன்றுக்கு தான் 100 முதல் 120 சிகரெட்டுகள் பிடித்ததாக டைனோசர்ஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள் ஒன்றுக்கு தான் 100 முதல் 120 சிகரெட்டுகள் பிடித்ததாக டைனோசர்ஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டைனோசர்ஸ்'. இந்த படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மிஷ்கின், ரமணா, நடிகர்கள் அருண் விஜய், விஜயகுமார், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மாதிரி இருக்கு. சினிமா நிகழ்ச்சி மாதிரி இல்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் முதல் அனைவரும் உறுதியாக பேசினார்கள். சினிமா தொழில் என்பது கொஞ்சம் பணத்தை போட்டு கொஞ்சம் பணத்தை எடுக்கும் தொழில் கிடையாது. இந்த படத்தின் தயாரிப்பாளர் உறுதியாக பேசியதை பார்த்தால் அவர் சினிமாவில் தான் கடைசி வரை இருப்பார் என்பது நன்றாகவே தெரிகிறது.
கடந்த இரண்டு நாளைக்கு முன்பு நான் என் அடுத்த படத்திற்கு கதை எழுதிக்கொண்டு இருந்தேன். அப்போது இந்த படக்குழு என்னை பார்க்க வந்தார்கள். அதில் இந்த படத்தின் இயக்குநர் மாதவனின் முகத்தை பார்த்தேன். நிறைய சிகரெட் புகைப்பவர் போல் இருந்தது. அப்போவே படம் ஹிட் என்று தெரிந்து விட்டது. ஏன் இதை சொல்கிறேன் என்றால், நான் முதல் படம் எடுக்கும் பொழுது ஒரு நாளைக்கு 100 சிகரெட் அடித்தேன். அஞ்சாதே படத்திற்கு எல்லாம் 120 சிகெரெட் அடித்தேன். அந்த டென்ஷன் இருந்தால் தான் இயக்குநர். டைனோசர்ஸ் ரொம்ப வித்தியாசமான தலைப்பு. அதற்கு கீழ் உள்ள சப்-டைட்டில் “Die No sirs”- என்ன அர்த்தம் என்பது எனக்கு புரியவே இல்லை. ஆனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என மிஷ்கின் கூறினார்.
இயக்குநர் - நடிகர் மிஷ்கின்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு,துப்பறிவாளன், சைக்கோ என பல படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்களை கொண்டுள்ளார். நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து வரும் இயக்குநர் மிஷ்கின் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.