இளையராஜா பாட்டில் கைவைத்த வனிதா விஜயகுமார்...ஹை கோர்ட்டில் பாய்ந்த வழக்கு
அனுமதியின்றி தான் இசையமைத்த பாடலை பயன்படுத்தியதற்காக நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள மிஸஸ் & மிஸ்டர் படத்திற்கு எதிராக இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார்

மிஸஸ் & மிஸ்டர்
வனிதா விஜயகுமார் எழுதி , இயக்கி , தயாரித்து , நடித்துள்ள மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
இளையராஜா வழக்கு
மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் மைக்கெல் மதன காம ராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற ' சிவராத்திரி ' பாடல் ரிமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் தான் இசையமைத்த பாடலை பயன்படுத்தியதற்காக மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு திங்கட் கிழமை ஜூலை 14 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது
இளையராஜா காப்புரிமை விவகாரம்
இளையராஜா இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தொடர்பான பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்துவதற்கு முன்பு தன்னிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும் என இளையராஜா தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இளையராஜா இசையமைத்த 4500 பாடல்களுக்கான சட்டரீதியான காப்புரிமை எக்கோ நிறுவனத்திடமே உள்ளதால் இந்த பிரச்சனை ஒவ்வொரு படத்திற்கும் தொடர்ந்து வருகிறது. அஜித் நடித்து இந்த ஆண்டு வெளியான குட் பேட் அக்லி படத்தில் அனுமதியில்லாமல் தனது பாடல் பயன்படுத்தப் பட்டதால் இளையராஜா படக்குழுவுக்கு 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத் தக்கது.
மிஸஸ் & மிஸ்டர் விமர்சனம்
ராபர்ட் மற்றும் வனிதா கணவன் மனைவியாக நடித்துள்ளார்கள். 40 வயதை எட்டும் வனிதா தனது வயதை கொண்டு கவலை கொள்கிறார். அதே நேரத்தில் அவரை குழந்தை பெற்றுக் கொள்ள கன்வின்ஸ் செய்கிறார்கள். ஆனால் ராபர்ட் தனக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். ராபர்ட் ஏன் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். வனிதா குழந்தைப் பெற்றுக் கொண்டாரா என்பதே படத்தின் கதை.




















