Mother's Day 2021: அன்னையர் தினம் : ஆல் டைம் டாப் ஃபேவரைட் அம்மா பாடல்கள் இதோ..
தமிழ் சினிமாவில் ஆண்டுகள் பல ஆனாலும், இன்றும் புத்துணர்வோடு இருக்கக்கூடிய ஃபிரஷான அம்மா பாடல்கள் இதுதான்.
இன்று மே 9, உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களை பெருமைப்படுத்தும் விதமாக "அன்னையர் தினம்" கொண்டாடப்படுகிறது . திரைப்பிரபலங்கள் உட்பட பலரும், அவர்களது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தங்களது வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவித்து வருகின்றனர். பலர் வாட்ஸப் ஸ்டேசஸில் "அம்மா " பாடல்களை அலரவிட்டு, உணர்ச்சிப்பூர்வமான பதிவுகள் இடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்படி தமிழ் சினிமாவில் ஆண்டுகள் பல ஆனாலும், இன்றும் புத்துணர்வோடு இருக்கக்கூடிய ஃபிரஷான" டாப் 5 அம்மா பாடல்" குறித்து பார்க்கலாம்.
1. அம்மா என்று அழைக்காத உயிரில்லையே
இது கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான "மன்னன் "படத்தில் இடம்பெற்ற பாடல். ஆண்டுகள் உருண்டாலும், பாடலின் ஆழமும் அர்த்தமும் பல தலைமுறைகளை கடந்து அம்மாக்களுக்கு உயிர்ப்பு கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உடல் குறைபாடுள்ள தன் தாயினை மகன் எப்படியெல்லாம் பேணிக் காக்கிறான் என்பதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதில் ரஜினி பாசமுள்ள மகனாக நடித்திருப்பார். இசைஞானி இளையராஜா தனது இசையில், கவிஞர் வாலியின் அழகான வரிகளை கோர்த்திருப்பார். பாடலுக்கு கே.ஜே ஏசுதாஸ் உயிர் கொடுத்திருப்பார்.
2. ஆராரிராரோ நான் இங்கு பாட
இந்த பாடல் இடம் பெற்றிருக்கும் படம் "ராம்" .கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படத்தின் கதைக்களமும் அம்மா, மகனின் பாசத்தை அடிப்படையாக கொண்டதாகத்தான் இருக்கும். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து, கே.ஜே ஏசுதாஸ் பாடிய பாடல் இது. பாடலில் ஜீவா மற்றும் சரண்யா நடித்திருப்பார்கள். "பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே " என அழகான பாடல் வரிகளை கொடுத்திருப்பார் பாடல் ஆசிரியர் ஸ்நேகன். ஒரு வெகுளியான மகனும், அவனையே உலகமாக நினைக்கும் அவனது அம்மாவும், அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பாசத்தை மீறிய நட்பும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
3. நீயே நீயே நானே நீயே
" எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி" என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் இது. கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியானது. ஸ்ரீகாந்த் தேவா இசையில், கவிஞர் வாலி அவர்களின் எழுத்தில் உருவான இந்த பாடலை பிரபல பாலிவுட் பாடகர் கேகே பாடியிருப்பார். " Single mother " ஆக இருக்கும் ஒரு தாயின் வளர்ப்பு எத்தகையது, அவள் எத்தனை உறவுகளுக்கு நிகரானவள் என மகன் பறைசாற்றுவாதாக இந்த பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும். பாடலில் நதியா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் அம்மா மகனாக வாழ்ந்திருப்பார்கள். அம்மா மகன் உறவு என்பது மரியாதையையும் , அன்பையும் தாண்டிய நட்புணர்வு என்பதை விளக்குவது போல இதன் காட்சிகள் அமைந்திருக்கும். இன்று இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
4. ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்..
இந்த பாடல் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான" வியாபாரி" படத்தில் இடம் பெற்றிருந்தது. இதனை "தேவா"இசையில் , ஹரிஹரன் பாடியிருப்பார். "உன்னையும் என்னையும் படைத்தது இங்கே யாருடா, தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா" என்ற வரிகள் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். கூட்டு குடும்பமாக இருக்கும் சூழலில் ஒரு தாயானவள் எத்தனை அவதாரங்களை கையில் எடுக்க வேண்டியதாக இருக்கும் என்பதை உணர்ந்த மகன் , தாயின் புகழை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதாக பாடல்களின் வரிகள் மற்றும் காட்சிகள் அமைந்திருக்கும்.பாடலில் அம்மாவாக நடிகை சீதாவும், மகனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருப்பார்கள்
5.நூறு சாமிகள் இருந்தாலும்
இந்த பாடல் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான "பிச்சைக்காரன்" என்ற திரைப்படத்தில் இடம்பிடித்திருந்தது. உடல்நிலை சரியில்லாத தன் தாயின் உயிரை காப்பாற்ற போராடும் மகன், தன் தாய் தனக்காக செய்த தியாகங்களை நினைவுக்கூர்வதாக பாடலின் வரிகளும் காட்சிகளும் அமைந்திருக்கும். இந்த பாடலை கவிஞர் ஏகாந்த்ராஜ் எழுத, விஜய் ஆண்டனி இசையமைத்து பாடியிருப்பார்.