Drishyam Korean re-make: கொரியன் மொழியில் ரீ மேக் ஆகும் திரிஷ்யம்...! பெருமிதத்தில் இந்திய ரசிகர்கள்..!
கொரியன் மொழியில் ரீ மேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெறுகிறது மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'திரிஷ்யம்' படம்.
2013ம் ஆண்டில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'திரிஷ்யம்'. மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தமிழில் பாபநாசம், கன்னடத்தில் த்ரிஷ்யா, தெலுங்கில் த்ருஷ்யம் மற்றும் ஹிந்தி த்ரிஷ்யம் என ரீமேக் செய்யப்பட்டது.
கொரியன் மொழியில் ரீ மேக் :
தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் 2015ம் ஆண்டு 'பாபநாசம்' என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒரு மனிதன் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த ஒரு கதையாகும். தற்போது இப்படத்தை கொரியன் மொழியில் ரீ மேக் செய்து வெளியிடுவதற்கான உரிமையை கைப்பற்றியுள்ளது தென் கொரியாவைச் சேர்ந்த இந்திய தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆந்தாலஜி ஸ்டுடியோஸ்.
பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பெவிலியனில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரிய நிறுவனங்களின் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்ட போது இதை தெரிவித்தனர். கொரியன் மொழியில் மிகவும் பிரபலமான இயக்குநர் கிம் ஜீ-வூன் இயக்க பாராசைட் நடிகர் சாங் காங்-ஹோ முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தியா மற்றும் கொரிய ஸ்டுடியோவிற்கு இடையிலான முதல் கூட்டணியை இந்த ரீ மேக் குறிக்கிறது.
உற்சாகத்தில் மோகன்லால் ரசிகர்கள் :
இந்த தகவல் வெளியானதில் இருந்து மோகன்லால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மாலிவூட் திரையுலகில் உருவான இப்படம் இத்தனை உயரத்தை எட்டி சர்வதேச அளவில் ரீ மேக் செய்யப்படுவது மிகவும் பெருமிதமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். பல கொரியன் படங்களில் இந்திய இயக்குநர்களால் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படம் கொரியன் மொழியில் ரீ மேக் செய்யப்படுவது நமது இந்திய சினிமாவிற்கு பெருமை தேடி கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளனர். இது வரையில் மலையாளத்தில் வெளியான படங்களில் திரையரங்க பாக்ஸ் ஆபிஸ் வசூல், ரீ மேக் உரிமை, சாட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் அனைத்தையும் சேர்த்து 600 மில்லியன் வரை வசூலித்த முதல் படம் இதுவாகும். தற்போது 'திரிஷ்யம் 3' படத்தின் பணிகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.