HBD Michael Jackson | இருந்தாலும் இறந்தாலும் ராஜா நான்: மரணித்து 12 ஆண்டுக்கு பின்னும் சாதிக்கும் மைக்கேல் ஜாக்சன்..!
அமெரிக்காவில் மட்டும் மைக்கேல் ஜாக்சனின் திரில்லர் ஆல்பத்தின் விற்பனை 34 மில்லியன் என்ற புதிய சாதனையை இந்த வாரம் படைத்துள்ளது
![HBD Michael Jackson | இருந்தாலும் இறந்தாலும் ராஜா நான்: மரணித்து 12 ஆண்டுக்கு பின்னும் சாதிக்கும் மைக்கேல் ஜாக்சன்..! Michael Jackson's album reaches new milestone 12 years after his death HBD Michael Jackson | இருந்தாலும் இறந்தாலும் ராஜா நான்: மரணித்து 12 ஆண்டுக்கு பின்னும் சாதிக்கும் மைக்கேல் ஜாக்சன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/29/15ef328da9fd0afedd976963196e5aa7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞரும், பாடகரும், டான்சருமான மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பாப் பாடலின் ராஜா என போற்றப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அந்த சமயத்தில் உலகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
எம்.ஜே. என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன் தனது மரணத்துக்கு பிறகும் தன்னுடைய ஆல்பங்களால் பல சாதனைகளை படைத்து வருகிறார். அவர் வெளியிட்டு உள்ள 10 ஆல்பங்களை பல லட்சக்கணக்கானோர் வாங்கி உள்ளனர். அவற்றில் சில ஆல்பங்கள், இன்னும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகின்றன. அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட திரில்லர் ஆல்பம் புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. மைக்கேல் ஜாக்சனின் 6-வது ஆல்பமான திரில்லர், அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. 1982-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வெளியான திரில்லர் ஆல்பம் உலகம் முழுவதும் அப்போது பட்டையை கிளப்பியது.
1983-ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஆல்பங்களில் முதலிடம் பிடித்தது திரில்லர். அந்த காலக்கட்டத்தில் பல மேலை நாடுகளில் திரில்லர் இசை ஒலிக்காத வீடுகளே இல்லை, அதை கேட்காத நபர்களே இல்லை என்னும் அளவுக்கு தனது இசையால் உலகத்தை கட்டிப்போட்டார் மைக்கேல் ஜாக்சன்.
அமெரிக்காவில் மட்டும் மைக்கேல் ஜாக்சனின் திரில்லர் ஆல்பத்தின் விற்பனை 34 மில்லியன் என்ற புதிய சாதனையை இந்த வாரம் படைத்து உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஆல்பங்களின் வரிசையில் திரில்லர் 2-வது இடத்தை பிடித்து உள்ளது.
முதலிடத்தில் ஈகிள்சின் தி கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் ஆல்பம் உள்ளது. அது அமெரிக்காவில் 38 மில்லியன் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வேண்டுமானால் ஈகிள் முதலிடத்தில் இருக்கலாம். ஆனால், உலகம் முழுவதும் மைக்கேல் ஜாக்சன் தான் ராஜா. அமெரிக்காவில் 2-வது இடத்தை பிடித்துள்ள அவரது திரில்லர் ஆல்பம், உலகம் முழுவதும் 70 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து உள்ளது.
மக்களுக்கு பிடித்த ஆல்பமாக மட்டும் அல்லாமல், வணிக ரீதியாக சக்கைபோடு போட்ட திரில்லர் ஆல்பம், மைக்கேல் ஜாக்சனுக்கு 1984-ம் ஆண்டு கவுரவம் மிக்க கிராம்மி விருதுகளை பெற்றுத் தந்தது.
மைக்கேல் ஜாக்சனின் மரணம் தொடர்பாக பல சதிகோட்பாடுகள், சந்தேகக் கதைகளை இணையத்தில் பலர் எழுதியுள்ளனர். இன்னும் அவரது மரணத்துக்கான உண்மை காரணம் குறித்து தீர்க்கமான முடிவுக்கு யாராலும் வர முடியல்லை.
மைக்கேல் ஜான்சன் மறைந்தாலும், அவரது இசை உலகின் பல இடங்களில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரது நடனத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல நடன பள்ளிகளில் மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தனது இசையாலும் நடனத்தாலும் அவர் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)