Mari Selvaraj: ‘மாமன்னன்’ கதையை முன்பே கவிதையாக எழுதிய மாரி செல்வராஜ்... இணையத்தில் வைரலாகும் வலி மிகுந்த வரிகள்!
“வயதில் இளையவனொருவன் உங்கள் தந்தையை பெயர் சொல்லி அழைப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா” எனத் தொடங்கும் நெகிழ்ச்சியான இந்தக் கவிதை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மாமன்னன் படம் ஒரு வாரத்தைக் கடந்து வசூலில் சாதனை புரிந்து வரும் நிலையில், தன் அப்பாவுக்காக மாரி செல்வராஜ் எழுதிய பழைய கவிதை ஒன்று இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
அப்பாவுக்காக கொதித்தெழும் மகன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சென்ற ஜூன் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பேசுபொருளாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், டைட்டில் கதாபாத்திர ரோலில் மையக் கதாபாத்திரத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு சீரியஸ் மோடில் நடிகர் வடிவேலு இப்படத்தில் நடித்துள்ளார். ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்துக்காக முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் - மாரி செல்வராஜ் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளனர். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
‘தேவர் மகனில் என் அப்பா...’
உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் எதிர்பாராத காம்போவில் இப்படம் அறிவிக்கப்பட்டது முதலே, கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை இப்படம் கிளப்பி வந்தது. தன் படங்களின் வாயிலாக தொடர்ந்து அரசியல் கருத்துகளை முன்வைத்து வரும் மாரி செல்வராஜ், தன் அனைத்து படங்களிலும் தொடர்ந்து சமூக நீதி பேசுவேன் என அனைத்து மேடைகளிலும் வெளியீட்டுக்கு முன்பே தெரிவித்தார்.
மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படத்தை நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் விமர்சித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையைக் கிளப்ப, மறுபுறம் “தேவர் மகனில் என் அப்பா நடித்தால் எப்படி இருக்கும் என்பதே கதை“ என்றும், வடிவேலு தன் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் நேர்க்காணல்களில் மாரி செல்வராஜ் தெரிவித்து வந்தார்.
வடிவேலு கதாபாத்திரம்
அதன்படி பட்டியலினத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான ‘மண்ணு’ என அழைக்கப்படும் மாமன்னனாக நடிகர் வடிவேலுவும், வடிவேலு எம்.எல்.ஏ ஆன பிறகும் சாதிய காரணங்களால் ஒடுக்கப்படுவது கண்டு அவரை சரிசமமாக நாற்காலியில் அமர வைக்கப் போராடும் மகனாக உதயநிதி ஸ்டாலினும் படத்தில் நடித்திருந்தனர்.
மேலும், தானும் சாதியரீதியிலான ஒடுக்குதலுக்கு ஆளாகி, எம்.எல்.ஏ ஆன பிறகும் தன் அப்பாவும் சாதிய காரணங்களால் அவமானப்படுத்தப்படுவது கண்டு வருந்தி, கோபம் கொண்டு போராடும் மகனை மையப்படுத்திய இந்தக் கதை, பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களையே குவித்து வருகிறது.
இச்சூழலில், இதே கருத்தை வலியுறுத்தி, கடந்த 2016ஆம் ஆண்டு தன் தந்தைக்காக இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய கவிதை ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் கவிதையைப் பார்க்கலாம்.
மாரி செல்வராஜின் கவிதை
“உங்களைவிட வயதில் இளையவனொருவன்
உங்கள் தந்தையை பெயர் சொல்லி அழைப்பதை
நீங்கள் கேட்டிருக்கிறீர்களா
அப்படியொரு அகால தருணம்
உங்களுக்கு வாய்க்காதிருக்கட்டும்
ஒருவேளை கேட்டுவிட்டால்
அந்த சத்தம்
ஒரு குருட்டு கூகையின் வழி தப்பிய தூரத்து அலறலை போல
உங்களை அச்சுறுத்தும்
அந்த சத்தம்
கடவாயில் கறி எழும்பு சிக்கிய தெரு நாயின் குமட்டும் இருமலாய்
வாலாட்டி உங்களை வெறுப்பேற்றும்
அந்த சத்தம்
தன் குட்டிகளையே விழுங்கிய ஒரு பூனையின் விஷ ஏப்பத்தை போல
நெருக்கமாய் கேட்டு உங்களை தொந்தரவு செய்யும்
சரி தப்பிக்க வழி
ஒரு கல்
அது உங்கள் கைகள் எடுக்கும்
முதல் கல்லாக கூட இருக்கலாம்
ஆனால் அது கூர்மையான கல்லாக
இருத்தல் அவசியம்
கொஞ்சம் ஆத்திரம் கூடி
சொல்வதற்காக மன்னித்துவிடுங்கள்
அக்கல்லைக்கொண்டு மிக சரியாக அவ்விளையவனின் ஆதி கபாலத்தை உடைத்து திறவாமல்
உங்களால் அச்சத்ததிலிருந்து தப்பிக்கவே முடியாது
ஆனால் என் பிரார்த்தனையென்பது
அப்படியொரு அகால தருணம்
உங்களுக்கேனும் வாய்க்காதிருக்கட்டும் என்பதே.......”